சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் வேலைக்கார பெண்மணிக்கு ஆயுள் தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.உ. செம்மல் தீர்ப்பளித்துள்ளார்

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் என்கின்ற சரவணன், ஜெயந்தி தம்பதியினர் இவர்களுக்கு கோஷினி வயது 4 என்ற மகள் உள்ளார். சரவணன் வழக்கறிஞராக பணிபுரிந்த நிலையில் அவருக்கும் அவரது மனைவி ஜெயந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

பணிப்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு

இந்தநிலையில் சரவணன் வீட்டில் வேலை செய்ய அரக்கோணத்தைச் சேர்ந்த ஆஷா ராணி என்பவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் சரவணனுக்கும் ஆஷா ராணிக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. சரவணன் வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனது நான்கு வயது மகளான கோஷினியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலி

சரவணனையும் அவரது சொத்துக்களையும் அடைய நினைத்த ஆஷா ராணி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக, இருக்கும் குழந்தை கோசினியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி கடந்த 2017 ஆண்டு கொலை செய்துள்ளார்.

இது குறித்து கோஷிணியின் தாய் ஜெயந்தி குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட குன்றத்தூர் போலீசார் ஆஷா ராணியை குழந்தையை கொலை செய்த வழக்கில் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பு

பின்னர் இது குறித்தான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சசிரேகா கொலை குற்றத்தை சாட்சி ஆதாரங்களோடு, நீதிமன்றத்தில் நிரூபித்தார்.

கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிபதி ப.உ. செம்மல், குற்றவாளி ஆஷா ராணிக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், மேலும் ஒரு பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இரு தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.