தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து வந்த பிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார். இவர், தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்திலும் நடித்திருக்கிறார். வில்லன் பாவுஜியின் அடியாள் ரோலில் நடித்திருக்கிறார். மேலும், முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார். கடந்த 8 நாட்களில் தெலுங்கு திரையுலகில் 2 பிரபலங்கள் மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபிஷ் வெங்கட் மகள் கண்ணீர்

53 வயதாகும் நடிகர் பிஷ் வெங்கட் கிட்னி மற்றும் கல்லீரல் செயலிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஃபிஷ் வெங்கட்டிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள். 53 வயதான வெங்கட்டிற்கு சிறுநீரக தானம் கிடைப்பதில் சிக்கலாக இருந்தது. முன்னதாக தன் அப்பாவின் சிகிச்சைக்கு நிதியுதவியும், சிறுநீரக தானமும் தேவை என ஃபிஷ் வெங்கட்டின் மகள் ஸ்ராவந்தி திரையுலகினருக்கு வேண்டுகோள் வைத்தார்.

பிஷ் வெங்கட் மரணம்

இதைத்தாெடர்ந்து நடிகர் பிரபாஸ் ஃபிஷ் வெங்கட்டின் அறுவை சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் தருவதாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்தார். இதுதொடர்பான செய்திகளும் வெளியாகின. ஆனால், குடும்பத்தாரின் சிறுநீரகம் பொருந்தவில்லை என்பதால் வெளியாள் யாராவது தானம் கொடுப்பார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார்கள். கடைசி வரை சிறுநீரக தானம் கிடைக்கவில்லை. உயிருக்கு போராடிய நிலையில் பிஷ் வெங்கட் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபாஸ் உதவி செய்யவில்லை

இந்நிலையில் பிரபாஸ் எந்த உதவியும் செய்யவில்லை என வெங்கட்டின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். எங்களுக்கு வந்த அழைப்பு வந்த அனைத்து போன் கால்களையும் அட்டண்ட் பண்ணி பேசினோம். ஆனால், பிரபாஸின் உதவியாளர் என்று ஒருவர் பேசியது பொய் என்று பின்புதான் தெரியவந்தது. இந்த தகவல் பிரபாஸூக்கு தெரியுமா என்று தெரியாது. நடிகர் பவன் கல்யாண், விஷ்வக் சென் உள்ளிட்ட நடிகர்கள் செய்த உதவியை மறக்கமாட்டோம் என அவர் தெரிவித்தார்.