இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், உப்பூரில் அனல் மின் திட்டப் பகுதிகளை மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் V.K. ராஜீவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது,

உப்பூரில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அனல்மின் திட்டத்திற்காக இதுவரை சுமார் ரூ.6,000 கோடி நிதி முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திட்டத்திற்குத் தேவையான நிலம் கையகப்படுத்துதல், கட்டுமானப் பணிகள் மற்றும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் பயன்பாட்டுத் திறன், அவற்றின் தற்போதைய நிலை, துருப்பிடித்துள்ள தன்மை மற்றும் உதிரிபாகங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து Siemens, BHEL உள்ளிட்ட தொழில்நுட்ப நிபுனர் குழுக்களைக் கொண்டு விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாய்வை நிறைவு செய்ய சுமார் 6 மாத காலம் தேவைப்படும். மேலும் திட்டத்தை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்றால் தேவையான நிலக்கரி போக்குவரத்து முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரிய கப்பல்கள் மூலம் நிலக்கரியைக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை, சிறிய கப்பல்கள் மூலம் கொண்டு வருதல் அல்லது சுமார் 20 கி.மீ. தொலைவிற்கு பிரத்யேக ரயில் பாதை அமைத்தல் உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

மின் உற்பத்தியைத் தொடங்குவதற்குத் தேவையான கூடுதல் நிதி

மேலும், திட்டத்தை முழுமையாக நிறைவு செய்து மின் உற்பத்தியைத் தொடங்குவதற்குத் தேவையான கூடுதல் நிதி, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்டப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. தொழில்நுட்ப மறுஆய்வு மற்றும் நிபுணர் குழுக்களின் ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர், அதன் அடிப்படையில் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாக உரிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும், எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய ஆய்வு மேற்கொண்டு, அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், தமிழ்நாடு மின்சார வாரிய திட்ட இயக்குநர் சேதுராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.