தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வீடு வீடாக சென்று இரவோடு இரவாக ஒட்டிய ஸ்டிக்கருக்கு மேல் இன்னொரு ஸ்டிக்கரை தவெகவினர் ஒட்டிய சம்பவம் நடந்தது. ஏன் தெரியுங்களா?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை திமுகவினர் வீடு வீடாக ஒட்டி வருவதை போன்று தமிழக வெற்றி கழகத்தினர் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை நேற்று கும்பகோணத்தில் வீடு வீடாக சென்று ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஸ்டிக்கரில் தவெக தலைவர் விஜய்யும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. ஆரம்பம் என்னவோ அமர்க்களம்தான்... அப்புறம்தான் நமுத்து போன பொரி போல் மாறிவிட்டது. ஒட்டும் போதும், ஒட்டிய பின்னரும் ஸ்டிக்கரை புகைப்படம் எடுத்து தலைமைக்கு அனுப்பி உள்ளனர் நிர்வாகிகள். அவ்வளவுதான் ஆயிரம் வாலா பட்டாசு கால் அருகில் வெடித்தது போல் அரண்டு போன முகத்துடன் நிர்வாகிகள் பிரிண்டிங் கடைக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதுக்கு காரணம் தலைமையிலிருந்து கிடைத்த டோஸ் என்கிறார்கள். என்ன டோஸ் என்பதுதான் ஹைலைட். வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் மீது மற்றொரு ஸ்டிக்கரை இரவோடு இரவாக ஒட்டினர் தவெகவினர். அப்படி என்ன இந்த புதிய ஸ்டிக்கரில் இருக்குன்னு பார்த்தா... புஸ்ஸி ஆனந்த் புகைப்படம் இல்லாம விஜய் புகைப்படம் மட்டும்தான் இருந்துச்சு. இது என்னப்பா என்று விசாரிச்சா புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்தை உடனடியாக அகற்றிவிட்டு புதிய ஸ்டிக்கர் ஒட்டுமாறு கும்பகோணம் நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து காலை முதல் வீடு வீடாக ஒட்டப்பட்ட ஸ்டிக்கருக்கு மேல் அவசர அவசரமாக புதிய ஸ்டிக்கர் அச்சடிக்கப்பட்டு இரவோடு இரவாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வீடுகளுக்கு சென்று, அந்த ஸ்டிக்கருக்கு மேல் புதிதாக புஸ்ஸிஆனந்த் இல்லாத ஸ்டிக்கர்களை ஒட்டி இருக்காங்க. அதுமட்டுமா? அதனை வீடியோவாக பதிவு செய்து தலைமை கழகத்திற்கு அனுப்புமாறும் உத்தரவாம். அப்படியே செய்து இருக்காங்க. அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி தலைமை கழகத்திற்கு அனுப்பப்பட்ட தற்போது சமூக வலைதளங்களில் இந்த ஸ்டிக்கர்தான் வைரலாகி வருகிறது. எதற்கு இப்படி ஸ்டிக்கரில் இருந்து புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்தை நீக்கினாங்க என்று விசாரிச்சா ஒரு தரப்பினர் என்ன சொன்னாங்கன்னா... விஜய்தான் முதல்வர் வேட்பாளர். மக்களின் ஆதரவு விஜய்க்குதான். அவர்தான் எதிலும் முன்னிலையில் இருக்கணும். புஸ்ஸி ஆனந்தை எதுக்கு சேர்த்து ஒட்டினீர்கள் என்று கேட்டு செம டோஸ் கிடைச்சுச்சாம். அதனால்தான் புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்தை நீக்கி புதுசா ஒட்டி இருக்காங்க என்று சொல்றாங்க.

மற்றொரு தரப்பினரோ புஸ்ஸி ஆனந்த்தான் தன் படம் இருக்கக் கூடாது தலைவர் படம் மட்டுமே இடம் பெறணும் என்று லெஃப்ட் அண்ட் ரைட் நிர்வாகிகளை வாங்கிட்டாரு. அதனாலதான் உடனடியாக வேறு ஸ்டிக்கர் ஒட்டினாங்கன்னு சொல்றாங்க. மேலும் தன்னை கேட்காமல் தன் புகைப்படத்தை சேர்க்கக்கூடாதுன்னும் கண்டிப்பா புஸ்ஸி ஆனந்த் சொல்லியிருக்காராம். இதுல எதுங்க உண்மைன்னு அந்த கட்சிக்காரங்களுக்கு மட்டுமே தெரியுங்க.