புதுச்சேரி: புதுச்சேரியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி, இளம்பெண்ணிடம் ரூ.10.80 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அன்னலிஸ் காடின் (23). இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.

அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இணையதளத்திற்குச் சென்று, முதலீடு தொடர்பான தனது விவரங்களை அன்னலிஸ் காடின் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அவரை மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.

முதலீட்டு நிறுவன பிரதிநிதி என அறிமுகம்

தொலைபேசியில் பேசிய பெண், தான் குறிப்பிட்ட முதலீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் என்றும், அதற்காக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய அன்னலிஸ் காடின், அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு தனது வங்கி கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளில் பணம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து பணம் செலுத்திய நிலையில், மொத்தம் ரூ.10.80 லட்சம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியவில்லை

இதனிடையே, முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற முயன்றபோது அவரால் அதை எடுக்க முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், தன்னை தொடர்பு கொண்ட முதலீட்டு நிறுவன பிரதிநிதியிடம் கேட்டுள்ளார்.

அப்போது, மேலும் ரூ.13 லட்சம் செலுத்தினால் மட்டுமே ஏற்கனவே முதலீடு செய்த தொகையை திரும்பப் பெற முடியும் என அந்த நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்னலிஸ் காடின், தான் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் சிக்கி இருப்பதை உணர்ந்துள்ளார்.

சைபர் போலீசில் புகார்

இதையடுத்து, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் அன்னலிஸ் காடின் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மோசடியில் பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள், பணப் பரிமாற்ற விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட செல்போன் எண்கள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் வரும் முதலீட்டு விளம்பரங்களை நம்பி பணத்தை அனுப்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.