இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்க சென்று 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் பட்டயக் கணக்காளர் அன்வி கம்தார். இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

இதனால் தன் ஃபாலோயர்களை கவருவதற்கும் லைக்ஸ்களை அள்ளுவதற்கு ஏராளமான புது புது இடங்களுக்கு சென்று ரீல்ஸ் எடுத்து போடுவது அன்வி கம்தாரின் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இதுபோன்ற பயணமே அவரது கடைசி பயணத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் சற்றும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். ஆம் மகாராஸ்டிராவில் 300 அடி பள்ளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

என்னதான் ரீல்ஸ் அன்வி கம்தாருக்கு புகழையும் பாராட்டையும் தேடித்தந்தாலும் இறுதியில் மரணத்தையே பரிசாக கொடுத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் வீடியோ எடுக்கும் போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

பள்ளத்தில் கம்தார் விழுந்ததும் அவரது நண்பர்கள் போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் கம்தாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கம்தாரை கண்டுபிடித்த போலீசார் அவரை மீட்டு மங்கான் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த 27 வயதாகும் அன்வி கம்தார் தன்னுடைய 7 நண்பர்களுடன் மழைகால சுற்றுலா பயணத்தை மேற்கொண்டார். செவ்வாய் கிழமை ராய்காட் மாவட்டத்தில் உள்ள மங்கானில் உள்ள புகழ்பெற்ற கும்பே நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க சென்று எதிர்பாராத விதமாக 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புறத்தை வீடியோ எடுக்கும் போது, அவர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாக உள்ளது. பேரும், புகழும், மகிழ்ச்சியும் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட நம் உயிரும் முக்கியம் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.