தஞ்சாவூர்: காலையில் மனு கொடுத்தோம்.. .மதியமே அறிவிப்பும் கொடுத்து நிதியும் ஒதுக்கீடு செய்துவிட்டார் முதல்வர் என்று உற்சாகத்தோடு வழக்கறிஞர்கள் வெடி வெடித்து கொண்டாடினர். எதற்காக தெரியுங்களா?

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என வழக்கறிஞர்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜெயங்கொண்டம் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் சந்தித்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டித்தர கோரிக்கை மனு அளித்தனர்.

இதனையடுத்து மதியம் அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, வழக்கறிஞர்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட ரூ.101.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவித்தார்.

இது வழக்கறிஞர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தின் முன்பு, அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோருக்கு வழக்கறிஞர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.