செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு பகுதியில், அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பான விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

மாவட்ட ஆட்சியர் D.சினேகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சியில் 2024- 2025 ஆம் நிதியாண்டில் குழந்தைநேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் (CFSIDS) ரூபாய் 33 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டிடம் புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தில் மேற்கூரை மீது சிமெண்ட் பூச்சு மேற்கொள்ளக் கூடாது எனவும் புட்டி பினிஷ் ( Putty finish) மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையர் ஊரக வளர்ச்சி துறை அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டும் சிமெண்ட் பூச்சு மேற்கொள்ளப்பட்டதால், சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் கருப்பு பட்டியல்

இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்ததில் அப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் வி.கிருஷ்ணன் என்பவரை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் படி இனிவரும் காலங்களில் எவ்வித ஒப்பந்த பணியும் மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை

மேலும் இப்பணியை கண்காணிக்க தவறிய உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து சிமெண்ட் பூச்சுகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இது போன்ற தவறுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத வண்ணம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் கூட்டம் நடத்தி தக்க அறிவுரை மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் மாவட்டத்தில் தற்போது பணி முடிக்கப்பட்ட மற்றும் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து பள்ளி கட்டட பணிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார கட்டிடங்கள், நியாய விலை கட்டிடங்கள் மற்றும் இதர கட்டிடங்கள் அனைத்திலும் சிமெண்ட் பூச்சு மேற்கொள்ளாமல் ஃபூட்டி ஃபினிஷ் ( Putty finish) மட்டும் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் நிலை என்ன?

இந்நிகழ்வில் 2 மாணவர்கள் மற்றும் 3 மாணவியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 3 மாணவியர்களுக்கு எவ்வித காயம் ஏற்படாததால் முதலுதவி வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

2 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில் ஒரு மாணவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஒரு மாணவருக்கு மட்டும் தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நலமாக உள்ளார் என்பதனை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.