தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாக பிரம்மம் தியாகராஜர் இறுதிக்காலம் வரை வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீட்டை வெளிநாடுகளிலிருந்தும் இசை ஆர்வலர்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

இசை என்றால் மயங்காத மனம் இருக்க முடியுமா? இனம், ஜாதி, மதம், மொழி என மனிதர்களை பிரிக்கும் எல்லைகளைக் கடந்து, அனைவரையும் ஒரே உணர்வில் இணைக்கும் அற்புத சக்தி இசைக்கு உண்டு. அந்த இசை உலகிற்கு அழியாப் பொக்கிஷங்களை வழங்கிய தென்னிந்திய சங்கீதத்தின் தலைசிறந்த மேதைகளில் ஒருவரும், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவருமான தியாக பிரம்மம் தியாகராஜர் வாழ்ந்த இல்லம், இன்று திருவையாறின் முக்கியமான சுற்றுலா மற்றும் இசை பாரம்பரிய அடையாளமாக விளங்கி வருகிறது.

தஞ்சாவூருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், திருவையாறுக்கு சென்றதும் பார்க்க விரும்பும் முக்கிய இடங்களில் ஒன்றாக தியாகராஜர் இறுதிக்காலம் வரை வாழ்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் திகழ்கிறது.

திருவாரூரில் பிறந்த இசை மேதை

தியாகராஜர் திருவாரூரில் புதுத்தெருவில் ராமபிரம்மம் மற்றும் சீதாம்பாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே தனது குடும்பத்தினருடன் திருவையாறுக்கு குடிபெயர்ந்தார்.

சிறு வயதிலிருந்தே இசையில் அபார ஈடுபாடு கொண்டிருந்த தியாகராஜர், பின்னாளில் தென்னிந்திய கர்நாடக இசைக்கு அளப்பரிய சேவை செய்த இசை ஞானியாக உயர்ந்தார். அவரது இசைப் பங்களிப்பு காரணமாகவே அவர் தியாக பிரம்மம் என இசை உலகில் போற்றப்பட்டார்.

தியாகராஜரின் குடும்பமும் இசை மற்றும் கலை பாரம்பரியத்துடன் தொடர்புடையதாக இருந்தது. அவரது தாய் வழி பாட்டனார் காளஹஸ்தி அய்யர், தஞ்சாவூர் அரண்மனையில் சமஸ்தான வித்வானாகப் பணியாற்றியவர். தாயார் சீதாம்பாளும் இசையில் தேர்ச்சி பெற்றவராக விளங்கியதாகக் கூறப்படுகிறது.

மராட்டிய மன்னரின் அன்பளிப்பு

தஞ்சாவூர் மராட்டிய மன்னர் இரண்டாம் துலாஜாஜி காலத்தில், ராமபிரம்மம் அரசவையுடன் தொடர்புடையவராக இருந்தார். ராமநவமி விழாக்களின்போது ராமாயணத்தை வாசித்து விரிவுரை கூறிய அவரது அறிவுத் திறனை பாராட்டிய மன்னர், அவருக்கு பசுபதி கோயில் பகுதியில் நிலத்தையும், திருவையாறு திருமஞ்சன வீதியில் ஒரு வீட்டையும் அன்பளிப்பாக வழங்கினார். அந்த வீடுதான் பின்னாளில் இசை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றது. ராமபிரம்மம் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற பாகப்பிரிவினையில், வீட்டின் வடக்குப் பகுதி தியாகராஜருக்கும், தெற்குப் பகுதி அவரது அண்ணன் ஜல்பேசன் என்ற பஞ்சாபகேசனுக்கும் ஒதுக்கப்பட்டது.

இறுதிக்காலம் வரை வாழ்ந்த இல்லம்

திருவையாறு திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள இந்த இல்லத்தில்தான் தியாகராஜர் தனது வாழ்நாளின் முக்கியமான காலங்களையும், இறுதிக்காலத்தையும் கழித்தார். தியாகராஜர் தனது 18-வது வயதில் பார்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் பார்வதி மறைந்ததைத் தொடர்ந்து, அவரது தங்கை கனகம்மாளை திருமணம் செய்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற மகள் பிறந்தார்.

இசையை தனது வாழ்க்கையின் உயிராகக் கொண்ட தியாகராஜர், எண்ணற்ற இசைப் படைப்புகள் மூலம் கர்நாடக சங்கீதத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கினார். அவரது வாழ்க்கை முழுவதும் இசையும், பக்தியும் ஒன்றோடொன்று இணைந்திருந்தன. அவரது மனைவி 1845-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தியாகராஜர் 1847-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி மறைந்தார்.

மீட்கப்பட்ட இசை வரலாற்றுச் சின்னம்

காலப்போக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இல்லத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்தது. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு தியாக பிரம்ம ஆராதனை மகோத்சவ சபையினர், தியாகராஜர் இறுதிக்காலம் வரை வாழ்ந்த இந்த இல்லத்தை மீட்டு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் இந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு, அதன் வரலாற்றுத் தன்மையை பாதுகாக்கும் வகையில் பராமரிக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இந்த இல்லம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இசை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.

கோயில் போன்ற உணர்வை தரும் இல்லம்

திருவையாறு திருமஞ்சன வீதியில் வலதுபுற வரிசையில் அமைந்துள்ள இந்த இல்லம், இன்று வெறும் பழமையான வீடாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. இசைக்கு தன்னையே அர்ப்பணித்த ஒரு மகத்தான கலைஞர் வாழ்ந்த புனிதமான இடம் என்ற உணர்வுடன் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்நாடக இசை மீது ஆர்வம் கொண்டவர்கள், தியாகராஜரின் வாழ்க்கை மற்றும் இசைப் பயணத்தை நினைவுகூரும் இடமாக இந்த இல்லத்தை பார்க்கின்றனர்.

தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் திருவையாறுக்கு சென்றால், முதலில் தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தை காண்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த இசை ஆர்வலர்களும் இந்த வரலாற்று இல்லத்தை காண வருவது அதன் உலகளாவிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இசை வாழும் இல்லம்!

அரசர்களின் காலத்தில் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட சாதாரண இல்லம், காலத்தின் ஓட்டத்தில் இன்று உலக இசை வரலாற்றின் முக்கியமான நினைவுச் சின்னமாக மாறியுள்ளது. தஞ்சையின் பாரம்பரியம் என்றால் கோவில்கள், அரண்மனைகள், ஓவியங்கள் மட்டுமல்ல... இசையின் மூச்சாக வாழ்ந்த மகத்தான மேதைகளின் நினைவுகளும் அதில் அடங்கியுள்ளன.

திருவையாறில் அமைதியாக நிற்கும் இந்த இல்லத்தின் சுவர்களுக்குள், தியாகராஜரின் இசை இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவே இசை ரசிகர்கள் உணர்கின்றனர்.