விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொள்ள வந்த நிலையில், பள்ளி முன்பாக சேறும் சகதியுமாக காணப்பட்ட சாலையில் அதிகாரிகள் அவசரமாக மணல் மற்றும் மண்ணை கொட்டி சீரமைத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாரிகள் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பள்ளியின் பிரதான நுழைவாயில் முன்பாக உள்ள சாலை நீண்ட நாட்களாக முறையான பராமரிப்பின்றி, மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் வருகை... அவசரமாக கொட்டப்பட்ட மண்?

இந்நிலையில் அமைச்சர் ஆய்வுக்கு வருவதற்கு முன்பாக, பள்ளி முன்பகுதியில் சேறும் சகதியுமாக காணப்பட்ட சாலையில் அதிகாரிகள் அவசர அவசரமாக மணல் மற்றும் மண்ணை கொட்டி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

சாலையில் இருந்த சகதியை சமாளிக்கும் வகையில் மண் கொட்டப்பட்டு, அமைச்சர் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்த நிலையில், பள்ளி முன்பாக இருந்த சாலையை ஏற்கெனவே சீரமைத்திருக்காமல், ஆய்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அவசரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதியில் பேசப்பட்டது.

தைலாபுரத்திலும் இதே நிலை?

இதற்கு முன்பாக தைலாபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டபோதும், பள்ளிக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக இருந்த நிலையில், அமைச்சர் வருகையையொட்டி அவசரமாக சாலை சீரமைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

அதேபோன்று தற்போது கொடுக்கூரில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி முன்பாகவும் சேறும் சகதியுமாக காணப்பட்ட சாலை, அமைச்சர் வருகையை முன்னிட்டு அவசரமாக மண் கொட்டி சீரமைக்கப்பட்டதாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மின்வெட்டு... அமைச்சர் வருகைக்காக ஜெனரேட்டர்

இதற்கிடையே, கொடுக்கூர் பகுதியில் இன்று மின்வெட்டு ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் மின்சாரம் இல்லாத நிலையில், அமைச்சர் ஆய்வுக்கு வருவதை முன்னிட்டு ஜெனரேட்டர் வரவழைக்கப்பட்டு பள்ளிக்கு மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் வருகையையொட்டி பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுப்புற ஏற்பாடுகள் திடீரென மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்பகுதியில் பேசப்பட்டது.

ஆய்வுக்கு முன்பே ஏன் சீரமைக்கப்படவில்லை?

அமைச்சர் ஆய்வுக்கு வந்த பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், பள்ளி முன்பாக உள்ள சாலை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறும் நிலையில், இதனை முன்கூட்டியே நிரந்தரமாக சீரமைக்காமல், உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர் வருகையின்போது மட்டும் அவசரமாக மண் கொட்டி சீரமைப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமைச்சர் வருகைக்கு முன்பாக சாலை மற்றும் மின்சார வசதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த அவசர ஏற்பாடுகள் தற்போது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.