திமுக - விசிக வார்த்தைப் போர்

தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விசிக இணைந்துள்ளது. இதன் மூலமாக திமுக உடனான கூட்டணியில் இருந்து விசிக வெளியேறி இருக்கிறது. விசிக சார்பாக வன்னி அரசு சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனால் திமுக நிர்வாகிகள் பலரும் விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து வருகின்றனர். அதே போல் விசிகவினரும் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதனால் சோசியல் மீடியாவில் திமுக மற்றும் விசிக இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ;

தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் அல்ல. விசிக தொண்டர்களின் விருப்பம் காரணமாகவே அந்த முடிவை எடுத்தேன்.

அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று தவெகவிடம் இருந்து வெளிப்படையாக அழைப்பு வந்தது. முதலில் விசிகவினர் என்னை அமைச்சரவையில் பங்கேற்க சொன்னார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன். வன்னி அரசை பரிந்துரைப்பதே சரியாக இருக்கும். அதன் பின் வன்னி அரசை பரிந்துரை செய்தோம். அதே போல் கூட்டணி குறித்து தேர்தலின் போது தான் முடிவு எடுக்கப்படும்.

திமுக கூட்டணியை உடைக்க சதி

என்னை பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க சதி நடந்தது. 2 ஆண்டுகளாக என்னை குறி வைத்து சாதிய, மதவாத சக்திகள் தாக்குதல் நடத்தினர். ஆனால் உறுதியாக திமுக தலைமையிலான கூட்டணியில் நேர்மையாக பயணித்தோம். தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவை தடுக்கும் வலிமை எனக்கு இல்லை.

ஒவ்வொரு கட்சிக்கும் தங்களின் முடிவை எடுக்க அதிகாரம் இருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், ஐ.யூ.எம்.எல் எடுத்த முடிவுகளை தடுத்து நிறுத்தும் வலிமை எங்களிடம் இல்லை. ஆனால் இன்றும் கூட என்னையே குறி வைக்கிறார்கள். நாங்கள் அவசரப்பட்டு முடிவு எடுக்கவில்லை.

விசிக நிர்வாகிகள் கருத்துக்கு கட்டுப்பட்டு முடிவு

விசிகவின் நேர்மையையோ, உரிமையையோ களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று அவருடைய வாழ்த்துடன் தான் முடிவு எடுத்துள்ளோம். அரசியல் பக்குவம் மற்றும் முதிர்ச்சியுடன் ஸ்டாலின் நடந்து கொண்டார். தற்போது விசிக நிர்வாகிகளின் கருத்துக்கு கட்டுப்பட்டு முடிவு எடுத்துள்ளேன்.

உள்ளாட்சி தேர்தலில் தவெக - வுடன் கூட்டணியா ?

வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம் என்பதே என் முடிவாக இருந்தது. ஆனால் கட்சியினர் முடிவு அது அல்ல..சில நேரங்களில் கட்சியினர் முடிவை தலைவனான நானும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தவெக சார்பாக அமைச்சரவையில் என்னையே பங்கேற்க சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன். உள்ளாட்சித் தேர்தலில் தவெக உடன் கூட்டணியா என்ற முடிவு தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.