அதிமுகவை தொடர்ந்து அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில், ஈ.வெ.ரா. திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழக்கவே, 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரும் சோகமாக உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆண்டு அவரும் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த சூழலில், மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதில் முக்கிய திருப்பமாக திமுகவே இந்த இடைத்தேர்தலில் நேரடியாக களம் காணும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரான வி.சி. சந்திரகுமாரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போன்றே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்தது.

இந்த நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.