Co - working Space அமைச்சர் ஆய்வு

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிடம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக கள ஆய்வு மற்றும் நடைபெற்று வரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

முதலாவதாக திரு.வி.க. நகர் தொகுதி , மண்டலம்-6, வார்டு-71, பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நெல்வயில் சாலையில் உள்ள கிளை நூலகம் , திரு.வி.க. நகர் தொகுதி, மண்டலம்-6, வார்டு-76 இல் பக்தவச்சலம் பூங்கா அருகில் உள்ள கிளை நூலகம், இராயபுரம் தொகுதி, மண்டலம்-5, வார்டு-53-ல் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், துறைமுகம் தொகுதி , மண்டலம்-5, வார்டு-55, சண்முகம் தெருவில் அமைந்துள்ள கிளை நூலகம், எழும்பூர் தொகுதி, மண்டலம்-8, வார்டு 108, ஹாரிங்டன் சாலையில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு

வட சென்னை வளர்ச்சி திட்டத்தில் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது முதல் கட்டமாக, தற்போது 6000 கோடி ரூபாய்க்கு மேலாக வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மாநில வளர்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தான் வடசென்னையில் தொடங்கப்படவுள்ள பல்வேறு புதிய திட்டங்களை இன்னும் இரண்டு தினத்தில் முதலமைச்சர் தொடங்கவுள்ளர் என்றார். கல்விக்கு முக்கியத்துவம் தரும் நம் தமிழ்நாடு முதலமைச்சர் வட சென்னையில் உள்ள 15 க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களை மேம்படுத்தும் பணியும் பழுதடைந்த பழைய நூலகங்களை அகற்றி புதிதாக கட்டுவதற்கும் ஆணையிட்டுள்ளார். அவைகளை ஆய்வு செய்வதற்காக இன்று வட சென்னையில் உள்ள கிளை நூலகங்களில் ஆய்வு மேற்கொண்டு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

துணை முதலமைச்சர் குறித்து அண்ணாமலை பேசியதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு

அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி , எங்களுக்கு பட்டறிவும் உள்ளது படிப்பறிவும் உள்ளது துணை முதலமைச்சரின் அரசியல் பங்களிப்பு என்பது நடுத்தர மக்கள், பாமர மக்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் துணை முதலமைச்சர் அவர்களை போற்றுகிறார்கள்.

எத்தனை அண்ணாமலை வந்தாலும் திராவிட ஆட்சி தான்

மழை வருவதற்கு முன்பே ஆய்வு செய்தும், மக்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை கொண்டு வருவதும், அடிதட்டு மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டே வருகிறார் நம் துணை முதலமைச்சர். ஒரு அண்ணாமலை அல்ல ஓர் ஆயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

இந் நிகழ்வில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா , சென்னை மேயர் பிரியா , சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டல குழு தலைவர் சரிதா, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.