ஏன் சைவம் உண்ணவேண்டும்? / சமைக்காத இயற்கை உணவை ஏன் உண்ண வேண்டும்? / இயற்கை உணவு நமக்குள் என்ன செய்கிறது? / உயிரோட்டத்தை அதிகரிக்கும் இயற்கை உணவு

Blurb: சைவ உணவுதான் சிறந்ததா? அதை எப்படி அறிந்துகொள்வது? சமைக்காத இயற்கை உணவு நமக்குள் ஏற்படுத்தும் அற்புதம் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையைத் தொடர்ந்து படித்தறியுங்கள்.

சத்குரு: நீங்கள் எந்த வகையான உணவை உண்கிறீர்கள் என்பது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தோ அல்லது உங்களின் மதிப்பீடுகள் மற்றும் நன்னெறிகள் சார்ந்தோ இல்லாமல் உங்கள் உடல் என்ன விரும்புகிறது என்பதைப் பொறுத்து இருக்க வேண்டும்.

உணவை எப்படித் தேர்ந்தெடுப்பது…

உணவு என்பது உடலைப் பற்றியது. உணவைப் பொறுத்தவரை, உங்கள் மருத்துவர்களிடமோ அல்லது உங்கள் ஊட்டச்சத்து நிபுணர்களிடமோ ஆலோசிக்காதீர்கள், ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.

உணவு என்று வரும்போது, எந்த வகையான உணவு உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறதென்று உடலையே கேளுங்கள்.

வெவ்வேறு உணவுகளை முயற்சி செய்து, அந்த உணவை சாப்பிட்ட பிறகு உங்கள் உடல் எப்படி உணர்கிறது என்று பாருங்கள். உங்கள் உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும், சக்தியாகவும், இனிமையாகவும் உணர்ந்தால், உடல் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அர்த்தம்.

உடல் சோர்வாக உணர்கிறதென்றால், காஃபின் அல்லது நிகோடினை உள்ளே ஏற்றித்தான் அதனை விழிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால், உடல் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தம், இல்லையா?

உங்கள் உடல் சொல்வதை நீங்கள் கவனித்தால், எந்த வகையான உணவு தனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை உடல் தெளிவாக சொல்லிவிடும். ஆனால் நீங்கள் இப்போது உங்கள் மனம் சொல்வதைக் கவனிக்கிறீர்கள். உங்கள் மனம் எப்போதும் உங்களிடம் பொய்யே சொல்லி வருகின்றது. இதற்கு முன் அது உங்களிடம் பொய் சொன்னதில்லையா?

இன்று உங்களிடம் இதுதான் என்று அழுத்தமாக சொல்கிறது. ஆனால் நேற்று நீங்கள் நம்பிய விஷயத்திற்காக, நாளை அது உங்களை ஒரு முட்டாளைப் போல் உணர வைக்கிறது. எனவே உங்கள் மனதின் போக்கில் நீங்கள் செல்ல வேண்டாம். உங்கள் உடல் சொல்வதை கவனிக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் உட்கொள்ளும் உணவின் தரத்தைப் பொறுத்தவரை, நமது உடலமைப்புக்கு அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே மிகவும் சிறந்தது.

நாம் இதை நெறிமுறைகளின் அடிப்படையில் பார்க்கவில்லை. நமது உடலமைப்புக்குப் பொருத்தமானது எது என்று மட்டும் பார்க்கிறோம் - உங்கள் உடலுக்குள் சௌகரியமாக இருக்கச் செய்யும் உணவுகளை நாம் உண்ண முயற்சிக்கிறோம். எந்த வகையான உணவை உட்கொண்டால் உங்கள் உடல் மிகவும் இலகுவாக இருக்குமோ, எந்த உணவிலிருந்து ஊட்டச்சத்தைப் பெற உடல் போராடத் தேவையில்லையோ, அந்த வகையான உணவைத்தான் நாம் உண்ண வேண்டும்.

சமைக்காத இயற்கை உணவின் அற்புதம்

நீங்கள் சைவ உணவை, அதன் உயிர்த்தன்மையோடு சாப்பிடும்போது, அது என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று சற்றுப் பரிசோதனை செய்து பாருங்கள். முடிந்தவரை உயிர்த்தன்மை உள்ள இயற்கை உணவை உண்ண வேண்டும் என்பதுதான் நோக்கம் – உயிர்த்தன்மையுடன் பச்சையாக உண்ணக்கூடியவற்றை எல்லாம் உட்கொள்ளலாம்.

உயிருள்ள ஒரு செல் என்பது, உயிர் வாழ்வதற்கான அனைத்தையும் கொண்டுள்ளது. நாம் உணவுகளை சமைக்கும்போது, அதில் உள்ள உயிர்த்தன்மை அழிக்கப்படுகின்றன.

உயிர்த்தன்மை அழிக்கப்பட்ட சமைத்த உணவுகளை உண்பது, நமது உடலுக்கு அதே அளவிலான உயிர்சக்தியைத் தருவதில்லை. ஆனால் நீங்கள் சமைக்காத இயற்கை உணவுகளை உண்ணும்போது, அது உங்களுக்குள் வேறொரு அளவிலான உயிரோட்டத்தைக் கொண்டுவருகிறது.

குறைந்தபட்சம் முப்பது முதல் நாற்பது சதவிகிதம், சமைக்காத உயிரோட்டமிக்க இயற்கை உணவுகளை உங்கள் உணவுமுறையில் கொண்டுவந்தால், அது உங்களுக்குள் உள்ள உயிர்த்தன்மையை நன்றாகத் தக்கவைப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் உண்ணும் உணவே உங்கள் உயிர்த்தன்மையாகும். பிற உயிர் வடிவங்களை நாம் உண்கிறோம். பிற உயிர் வடிவங்கள், நம் உயிரை தக்கவைத்துக்கொள்ளத் தங்கள் உயிரை அர்ப்பணிக்கின்றன.

நம் உயிரை நிலைநிறுத்துவதற்காகத் தன் உயிரை அர்ப்பணித்திருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும், மகத்தான நன்றியுணர்வுடன் நம்மால் உணவை உண்ண முடியுமென்றால், இப்போது அந்த உணவு உங்களுக்குள் மிகவும் வித்தியாசமான நிலையில் செயல்படும்.