ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கொலை சம்பவத்தை தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெட்டிக் கொலை:

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ரஷீத் என்பவர் நேற்று இரவு, பரபரப்பான சாலையில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை ஷேக் ஜிலானி என்பவர் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக வெளியான வீடியோவில் ஷேக் ஜிலானி , கத்தியைப் பயன்படுத்தி, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதில், பாதிக்கப்பட்டவரின் இரு கைகளையும் துண்டித்து, அவரது கழுத்தில் வெட்டுவதை பார்க்க முடிகிறது. இதையடுத்து ஜிலானி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

144 தடை:

இது குறித்து பல்நாடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சீனிவாசராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த கொலையானது அரசியல் காரணங்களுக்காக இல்லை என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கொலை நடந்தது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இத்தாக்குதலைத் தொடர்ந்து அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட வினுகொண்டா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஒய். எஸ். ஆர். தரப்பு:

இச்சம்பவத்திற்கு ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியானது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஜிலானிக்கு எதிராக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி.க்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் (டி.டி.பி.) இடையேயான அரசியல் போட்டியால் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இச்சம்பவம் குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது "டிடிபி கட்சியைச் சேர்ந்த ஜிலானி, YSRCP செயல்பாட்டாளரைக் கொடூரமாக வெட்டி கொண்டிருக்கிறார். வினுகொண்டா YSRCP இளைஞர் பிரிவுத் தலைவர் ரஷீத் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டதில், அவரது இரு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கழுத்தில் படுகாயம் அடைந்த ரஷீத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

டிடிபி தரப்பு:

இந்நிலையில் தெலுங்கு தேச கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், இருவரும் ஒய்.எஸ். ஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்களின் சொந்த பிரச்னைகளால் இந்த தாக்குதல் நடைபெற்றது என டிடிபி கட்சியினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பரபரப்பான சாலையில், கட்சியைச் சேர்ந்த இளைஞர் அணி தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.