ஹரியானா மாநிலத்தில் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் கழண்டு விழுந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலர் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்களின் பொழுதுபோக்குகளில் கண்காட்சிகளும், தீம் பார்க்குகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய இடங்களில் ராட்டினங்கள், நீர் விளையாட்டுகள், பொருட்கள் கண்காட்சி என பல வகையான விஷயங்களையும் நம்மால் ரசிக்க முடியும் என்பதால் வருடம் முழுவதும் இதற்கு மக்கள் ஆதரவு இருக்கும். இந்த நிலையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்குண்ட் பகுதியில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைக் காண சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் உள்ளூர் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

No matter what the name or assurance - never bet your life in any amusement park ride in India ! You might end up losing your life ! pic.twitter.com/kRBtvBnhGk

— Prashanth Rangaswamy (@itisprashanth) February 7, 2026

இந்த கண்காட்சியானது ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றிருந்தனர். அவர்களை மேலும் மகிழ்விக்க ராட்டினங்களும் இடம் பெற்றிருந்தது. இதனிடையே மிகப்பெரிய ஊஞ்சல் மாதிரியிலான ராட்சத ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருந்தபோது அதில் அமர்ந்திருந்த மக்கள் கத்தி ஆரவாரமிட்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அது கழண்டு விழுந்தது.

அப்போது ராட்டினம் கீழே பணியில் இருந்த பல்வால் காவல்துறையின் ஆய்வாளர் ஜெகதீஷ் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த ராட்டினத்தில் இருந்தவர்கள் பெல்ட்டால் பிணைக்கப்பட்டிருந்ததால் காயத்துடன் உயிர் தப்பினர். மாலை 6:15 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த காவல் ஆய்வாளர் ஜெகதீஷ் பிரசாத் வரும் மார்ச் மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ராட்டினம் கழண்டு விடுவதைக் கண்ட அவர் மக்களை காப்பாற்ற செல்லும்போது அவரது முகம் மற்றும் தலையில் ராட்டினத்தின் பகுதி அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்து நடந்த உடனேயே கண்காட்சி முழுவதுமாக நிறுத்தப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். மாவட்ட நீதிபதி ஆயுஷ் சின்ஹா மேற்பார்வையில் உடனடியாக மீட்பு பணி நடைபெற்றது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் காவலர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் நயாப் சைனி இரங்கல் தெரிவித்துள்ளார்.