வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்

2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஒருபக்கம் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கான முன்கள பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் தேர்தலை சீரும் சிறப்புமாக நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்படியான தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. கிட்டதட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் இந்த பணிகள் நடைபெற்றது. இந்த எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறும் முன் தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் பூத் லெவல் அதிகாரிகளை கொண்டு வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களைக் கொடுத்து அதனைப் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியானது நடைபெற்று வந்தது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாள்

இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இருக்கும் முகவரியில் இல்லாதவர்கள், உயிரிழந்தவர்கள், இரட்டை பதிவு, விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யாதவர்கள் போன்றவை நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 14ம் தேதி வரை இந்த படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது 5 கோடி 43 லட்சம் 76 ஆயிரம் 757 வாக்காளர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தகுதி இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் மீண்டும் பெயர் சேர்க்கலாம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதற்கான சிறப்பு முகாம்களும் நடைபெற்று வந்தது.

அதற்கான கால அவகாசம் ஜனவரி 18ம் தேதியான இன்று நிறைவடைகிறது. எனினும் இன்னும் ஒரு முறை சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் சுமார் 18 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பெயர்களை நீக்குவதற்கு 32,288 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே பெயர் சேர்க்க, திருத்த மேற்கொள்ள, புதிதாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும், தேவைப்படும் மாற்றம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.