வியட்நாமைச் சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது புதிய 7-சீட்டர் எலக்ட்ரிக் காரை (VinFast MPV 7) அறிமுகம் செய்யத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. நாளை ( ஏப்ரல் 15ஆம் தேதி) இந்த சொகுசு கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரே சார்ஜில் 500 கி.மீ. ரேஞ்ச்

எலக்ட்ரிக் கார்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் பிரதான எதிர்பார்ப்பு அதன் பேட்டரி ரேஞ்ச்தான். அந்த வகையில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த புதிய கார், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 500 கிலோமீட்டர் வரை தடையின்றி பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிவேக சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெறவுள்ளது.

என்னென்ன வசதிகள்?

பெரிய குடும்பங்கள் சொகுசாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க ஏற்ற வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய டச்- ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பிரீமியம் இருக்கைகள் எனப் பல அதிநவீன வசதிகள் இதில் இடம்பெறவுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, நவீன ADAS தொழில்நுட்பம் மற்றும் பல ஏர்பேக்குகள் வழங்கப்பட உள்ளன.

10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் 100 கி.மீ. வேகத்தில் காரை ஓட்ட முடியும். இந்த காரில் 60 kWh பேட்டரி பேக் உள்ளதால் நீண்ட தூரம் தடையின்றிச் செல்ல முடியும்.

என்ன நிறங்கள்?

6 வெவ்வேறு வண்ணங்களில் குறிப்பாக, கருப்பு, கிரே, சிவப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வின்ஃபாஸ்ட் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

இந்திய சந்தையில் பிரீமியம் எலக்ட்ரிக் கார் பிரிவில் களமிறங்கும் இந்த வாகனத்தின் விலை, சுமார் ரூ. 19 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரை (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என ஆட்டோமொபைல் நிபுணர்கள் கணிக்கின்றனர். சந்தையில் இது கியா EV9 போன்ற முன்னணி மாடல்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தனது பிரம்மாண்டமான உற்பத்தி ஆலையை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், உள்நாட்டிலேயே கார்கள் உற்பத்தி செய்யப்படும்போது, உதிரிபாகங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதுடன், இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கார்களை வடிவமைக்கவும் இந்நிறுவனத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், இந்த 7 சீட்டர் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.