முழு முதற்கடவுளாக இந்து மார்க்கத்தில் போற்றி வணங்கப்படுபவர் விநாயகப் பெருமான். எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகரை வணங்கி தொடங்குவதே இந்து மார்க்கத்தில் வழக்கமாக உள்ளது.

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்:

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வட இந்தியாவிற்கு நிகராக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக கோயில்கள் களைகட்டி காணப்பட்டது. இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அதிகாலை முதலே கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் தொடங்கிவிட்டது. குறிப்பாக, புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோயில் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

அதிகாலை முதலே கோயிலில் குவியும் பக்தர்கள்:

காலை முதல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். அங்கு மட்டுமின்றி புகழ்பெற்ற திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில், கோவையில் உள்ள புலியகுளம் விநாயகர் கோயில், விழுப்புரத்தில் உள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயில் ஆகிய கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று முழுவதும் பக்தர்கள் அதிகளவு குவிவார்கள் என்பதால் சிறப்பு வழிபாட்டிற்கும், பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கம்பீரமாக காட்சி தரும் விநாயகர் சிலைகள்:

விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகர் சிலைகள்தான் அனைவரது நினைவுக்கும் வரும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் வீதிகளில் விநாயகர் சிலைகள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. சிறிய அளவு முதல் பிரம்மாண்டமான உயரம் வரையிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், காலை முதலே சிறுவர்கள், இளைஞர்கள் விநாயகர் சிலைகளை செய்து பாட்டுப் பாடிக்கொண்டு வீடுதோறும் உலா வருகின்றனர்.

காய்கறிகள், பழங்கள் விற்பனை:

பக்தர்களும் இன்று வீடுகளில் சிறப்பு பூஜையில் ஈடுபட உள்ளனர். இதற்காக நேற்று முதலே காய்கறிகள், பழங்கள், பூக்களின் வரத்து சந்தைகளில் அதிகரித்து காணப்ப்டுகிறது. காலை முதலே சந்தைகளில் விற்பனை சக்கைப்போடு போட்டு வருகிறது. இன்று விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி முகூர்த்த நாளும் என்பதால் காலை முதலே விற்பனை வழக்கத்தை விட அதிகமாக நடந்து வருகிறது.

சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் பல அடி உயரத்தில் பிரம்மாண்டமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளுக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் பதற்றமான இடங்களில் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர்.

சொந்த ஊர் சென்ற பயணிகள்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறையை கொண்டாடுவதற்காகவும், கோயிலுக்குச் செல்வதற்காகவும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்ப்டடு வருகிறது. சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் இருந்து பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் முதலே தொடர்ந்து புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாராஷ்ட்விராவின் மும்பையில் பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். டெல்லி, லக்னோ, அகமதாபாத் போன்ற வட இந்திய நகரங்களிலும், பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதரபாத் போன்ற தென்னிந்திய நகரங்களிலும் கொண்டாடி வருகின்றனர்.