தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன். பொல்லாதவன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என அடுத்தடுத்த படங்களால் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

விடுதலை 2:

இவரது இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. விடுதலை இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலருக்கு பலரும் பாராட்டி வரும் நிலையில், தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும். வளர்ச்சியை அல்ல என்ற வசனம் மூலமாக விஜய்யை தாக்குவது போலவும், படிக்காத ஒருத்தர் தண்டவாளத்தில் தலையை வச்சு படுத்ததால்தான் நாம இன்னைக்கு படிச்சுருக்கோம் என்ற வசனத்தில் கருணாநிதியை பாராட்டியிருப்பதற்கும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

விடுதலை எனும் டிகிரி:

இந்த நிலையில், விடுதலை 2 ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, “ இது முழுக்க முழுக்க வெற்றி மாறன் என்ற இயக்குனர் மட்டுமே உரிமை கொண்டாடக்கூடிய படம். உரிமை கொண்டாடக்கூடிய ஒரு அறிவு. அவர் இந்த படத்தை உருவாக்க நாங்கள் எல்லாம் உறுதுணையாக இருந்தோம் என்பதே எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.

இது அவ்வளவு எளிதில் உருவாக்கக்கூடிய படம் கிடையாது. அவரும், அவரது குழுவும். அவரது உதவி இயக்குனர்களும் அனைவரும் சேர்ந்து அவர் பின்னால் இருந்து படம் உருவாக உறுதுணையாக இருந்தோம். நான் பி.காம் 3 வருஷம் படிச்சேன். வெற்றி மாறன் என்ற பல்கலைக்கழகத்தில் விடுதலை என்ற பட்டத்தை 4 வருஷம் படிச்சு வாங்கிருக்கேன்.

வெற்றி மாறன்தான் வாத்தியார்:

ஒரு படம் நடிக்கும்போது என் இயக்குனர் ஒரு வசனத்தை எதற்காக எழுதியிருக்கார்? என்று முடிந்த அளவு புரிந்து கொள்ள முயற்சிப்பேன். திருப்தியாக அதில் நடிக்க முயற்சிப்பேன். இந்த படத்தைப் பொறுத்தமட்டில் நடிப்பது மட்டுமில்லாமல் அந்த வசனத்தை எடுத்துக் கொண்டு அந்த வசனத்தை வீட்டிற்கு சென்று நான் பலரிடம் ஆலோசிக்கும் அளவிற்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

புது வார்த்தைகளை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு வாத்தியார் வெற்றிமாறன். அந்த வாத்தியாரிடம் பயின்ற மாணவனாக நான் கற்றதும், பெற்றதும் மிகப்பெரியது. “

இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை படத்தில் வாத்தியார் என்ற போராளி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். உரிமைகளுக்காக போராடும் ஒரு குழுவினருக்கும், காவல்துறையினருக்கும் நடக்கும் யுத்தமாக விடுதலை படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சூரியுடன், பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜீவ்மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவணன் சுப்பையா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.