2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் களமிறங்குவதாக சொல்லப்படும் நிலையில் அத்தொகுதி தேர்தல் வரலாற்றை நாம் காணலாம்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நிலவரம்

வடசென்னையில் மிக முக்கியமான ஒரு பகுதி பெரம்பூர் தான். மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், வியாசர்பாடி, பார்வதி நகர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது இந்த தொகுதியாகும். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளுக்குப் பின் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக பெரம்பூர் உருவாகியுள்ளது.

அங்கு 1,07,995 ஆண் வாக்காளர்களும், 1,14,726 பெண் வாக்காளர்களும், 71 மூன்றாம் பாலினத்தவர்களும் மொத்தம் 2,22,792 பேர் இடம்பெற்றிருக்கின்றனர். எஸ்.ஐ.ஆர். சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பின் பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 24,142 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் வரலாறு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 1952,1957, 1962, 1967, 1971, 1977, 1980, 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலையும், 2019ம் ஆண்டு சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது.

1952ம் ஆண்டு சோசலிஸ்ட் கட்சி (இந்தியா) சார்பில் போட்டியிட்ட பக்கிரி சாமி பிள்ளை வெற்றி பெற்றார்.

1957ம் ஆண்டு அதே பக்கிரிசாமி பிள்ளை தனிச்சையாக நின்று ஜெயித்தார்.

1962ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சுலோசனா வெற்றி பெற்றார்.

1967ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட சத்தியவாணி முத்து வென்றார்.

1971ம் ஆண்டு சத்தியவாணி முத்து தான் வென்றார்.

1977ம் ஆண்டு திமுக சார்பில் வேட்பாளர் மாற்றப்பட்டு பாலன் போட்டியிட்டு வென்றுள்ளார்.

எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டு நடந்த 1980ம் ஆண்டு தேர்தலிலும் பாலன் வென்றார்.

1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பரிதி இளம் வழுதி வெற்றி பெற்றார். முன்னதாக திமுக சார்பில் வென்றிருந்த சத்தியவாணி முத்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோற்றார்.

1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் செங்கை சிவம் என்பவர் திமுக சார்பில் களம் கண்டு வென்றார்.

1991ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.பி.சேகர் வெற்றி கண்டார்.

1996ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் செங்கை சிவம் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றார்.

2001ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகேந்திரன் போட்டியிட்டு திமுகவின் செங்கை சிவத்தை தோற்கடித்தார்

2006ம் ஆண்டு அதே மகேந்திரன் திமுக கூட்டணியில் இடம்பெற்று வென்றார்

2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சௌந்தரராஜனை வேட்பாளராக நிறுத்தி வெற்றி கண்டது.

2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

வெற்றிவேல் மறைந்ததால் 2019ல் நடந்த இடைத்தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் ஆர்.டி.சேகர் போட்டியிட்டு வென்றுள்ளார்.

திமுக கோட்டை பெரம்பூர்

இதுவரை நடந்த தேர்தல் வரலாற்றையும்,முடிவையும் வைத்து பார்க்கும்போது பெரம்பூர் தொகுதி திமுக - அதிமுகவுக்கு சாதகமாகவே இருந்து வந்திருக்கிறது. எனினும் திமுக நேரடியாக களம் கண்டு அதிக முறை வென்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக அங்கு திமுக தான் ஆட்சி செய்து வருகிறது. அப்படி இருக்கும்போது விஜய் அந்த தொகுதியை தேர்வு செய்ய காரணம் சென்னையில் பெரம்பூர் தொகுதி நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதி என சொல்லப்படுகிறது.இங்கு வன்னியர் சமூக மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். அவர்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகளாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

அதேசமயம் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஆர்.டி.சேகர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் செயல்பட்டு வருகிறார். 1988ல் எழும்பூர் மாணவரணி அமைப்பாளர், அதன்பின் வடசென்னை திமுக மாணவரணி அமைப்பாளர், தொடர்ந்து வட சென்னை இளைஞரணி அமைப்பு செயலாளராக இருந்துள்ளார்.

மேலும் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலர், 2008ல் பகுதி செயலாளர், 2011 முதல் 2014ம் ஆண்டு வரை வடசென்னை திமுக மாவட்ட செயலாளர், 2015ல் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் என பல பொறுப்புகளை ஆர்.டி.சேகர் வகித்துள்ளார். இப்படியான நிலையில் தான் 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

விஜய்க்கு நட்சத்திர அஸ்தஸ்து மற்றும் இளம் தலைமுறையினர் வாக்குகள் மற்றும் ஆதரவு இருந்தாலும் திமுக சார்பில் வலுவான போட்டியாளர் களமிறக்கப்பட்டால் நிச்சயம் களம் கடுமையானதாக இருக்கும். மேலும் தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாக பெரம்பூர் மாறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.