இன்றைய அரசியல் சூழலில் திருமாவளவன் முதல்வர், துணை முதல்வர் பதவிக்கு முன்மொழியப்படுவது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கிறேன் என விசிக எம்.எல்.ஏ., வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த நிலையில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தவெக அரசு ஆட்சியில் அமர விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. அக்கட்சி தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் இடம் போன்றவை எல்லாம் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்து வெளியிலிருந்து ஆதரவு தருவதாக விசிக தெரிவித்தது.

இந்த நிலையில் விஜய்க்கு எதிராக அதிமுக - திமுக இணைந்து திருமாவளவனை முதலமைச்சராக்க முடிவு செய்த சம்பவமும் அரங்கேறியது. ஆனால் அதனை தான் திட்டவட்டமாக மறுத்ததாக திருமாவளவன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விசிக துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வன்னி அரசு நேர்காணல் ஒன்றில் தேர்தல் களத்தில் நடந்த பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளராக திருமாவளவன்

அவரிடம் திருமாவளவன் முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழியப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அது நடந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். இந்த சூழலிலாவது இப்படி ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டது. அப்படியான சூழல் உருவாகியிருக்கிறது. திருமாவளவன் பெயர் முதலமைச்சர் வேட்பாளராக முன்னெடுக்கப்படுகிறது என்றால் சமூகத்தில் ஒரு சிறிய அசைவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த முறை கண்டிப்பாக அவர் பெயரை முதலமைச்சர் வேட்பாளராக தைரியமாக முன்மொழியலாம் என்ற நிலைக்கு தான் வந்தேன். இப்படி பாசிட்டிவான நிலையாக தான் பார்த்தேன். எங்களுக்கு நாட்டை ஆள்வதற்கான எல்லா தகுதியும் இருக்கிறது. இவ்வளவு காலம் இல்லாவிட்டாலும் இப்போதாவது முன்மொழிகிறார்களே என்ற மகிழ்ச்சி தான் உள்ளது” என வன்னி அரசு கூறினார்.

திமுக - அதிமுக இணைப்பு

அதேசமயம் திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைப்பது என்பது விஜய் மீதான கோபம் என எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த தகவல் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. இருகட்சிகளும் இணைவதை முன்பே முயற்சிகள் நடந்துள்ளது. இருகட்சிகளும் வலிமையாக இருப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது. அந்த அடிப்படையில் கூட அந்த இணைப்பை நாம் வரவேற்கலாம்.

முதலமைச்சர் விஜய் ஆதரவு கேட்ட நிலையில், என்னை போன்றவர்களுக்கு இந்த சூழலைப் பயன்படுத்தி திருமாவளவன் துணை முதல்வராக வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனை உயர்நிலைக் குழுவில் சொன்னோம். வெறும் ஆதரவு மட்டும் தராமல் இப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பயன்படுத்தலாம் என கூறினோம். இந்த அரசை வழிநடத்தக்கூடிய இடத்துக்கும் அவர் வரலாம். அதேசமயம் திருமாவளவன் என்ன மாதிரியான முடிவெடுக்கிறாரோ அதற்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது அதனை உடனே பயன்படுத்துபவர்கள் நாங்கள் கிடையாது. அதை வைத்து எங்களின் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் அது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. எதுவும் குழப்பம் நடந்தால் அது நமக்கு எதிராக அமையும் என்ற சூழலும் இருந்தது. தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்” என வன்னி அரசு தெரிவித்தார்.