மத்தியப் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வு மாணவர் சேர்க்கைக்குப் பிறகும் இளநிலை, முதுநிலை இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் தாங்களாகவே நுழைவுத் தேர்வுகள் நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறி இருப்பதாவது:

’’மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 3 அல்லது 4 கட்டங்கள் முடிந்த பிறகும் சில மத்தியப் பல்கலைக்கழகங்களில் இடங்கள் காலியாக இருப்பது யுஜிசியின் கவனத்துக்கு வந்துள்ளது.

ஏராளமான மாணவர்களின் தரமான உயர் கல்வியை மறுப்பதாகும்

ஒட்டுமொத்த கல்வி ஆண்டுக்கும் இடங்களை காலியாக வைத்திருப்பது என்பது வளங்களை வீணடிப்பது மட்டுமல்ல, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர ஆசைப்படும் ஏராளமான மாணவர்களின் தரமான உயர் கல்வியை மறுப்பதாகும். எனினும் மாணவர் சேர்க்கையில், க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள்தான் பிரதானமாக இருக்க வேண்டும்.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஏற்படும் காலி இடங்களை நிரப்பும் வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. க்யூட் தேர்வு எழுதிய மாணவர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட படிப்புகள், பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்தாலும் இல்லாவிட்டாலும்கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

UGC releases SOPs to fill all seats in Central Universities, Here is what they entail. https://t.co/UtIAy0XaTU

— Mamidala Jagadesh Kumar (@mamidala90) August 1, 2024

பாட சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில் தளர்வு

அதேபோல பல்கலைக்கழகங்கள் துறை வாரியாக குறிப்பிட்ட பாட சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில் தளர்வை மேற்கொள்ளலாம். அதற்குப் பிறகும் சீட்டுகள் காலியாக இருந்தால், பல்கலைக்கழகங்கள் தானாகவே நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். அல்லது சம்பந்தப்பட்ட துறை ஸ்க்ரீனிங் தேர்வை நடத்தலாம்.

தகுதித் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டும் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கலாம். ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை நடைமுறையும் மெரிட் மற்றும் வெளிப்படைத் தன்மை அடிப்படையில் நடக்க வேண்டும்’’.

இவ்வாறு யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.