தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தவெக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியை ஆதரித்து நடிகரும், அதிமுக பிரமுகருமான ராமராஜன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

மாற்றுக் கட்சி வேட்பாளர்களுக்கு பரப்புரை

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை அனைவரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான நிலையில் அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே செயல்பட்டு வரும் நடிகர் ராமராஜன், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் எம்.பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

தொடர்ந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் ராமராஜன் 2026 சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியையும், தன் சொந்த ஊரான மதுரை மேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சௌ வேட்பாளர் முருகன் என்பவரையும் ஆதரித்து பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது.

ஆனால் என் திரையுலக வாழ்வை தொடங்க காரணமான ஆரம்பகால தியேட்டர் முதலாளி மறைந்த அம்பலகாரர் ஐயாவின் மகன் முருகன், 35 ஆண்டுகளுக்கு மேலாக என் நெருங்கிய நட்பில் உள்ள அன்பு உறவு காரணமாக விபின் சக்கரவர்த்திக்கும் பரப்புரை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

பின்னணியில் இருக்கும் காரணம்

இந்த நிலையில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் விபின் சக்கரவர்த்தியை ஆதரித்து ராமராஜன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, “ஆலங்குளம் தொகுதியில் விபின் சக்கரவர்த்திக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். அவருடைய குடும்பம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக உறவில் இருந்து வருகிறது. நான் நடித்த சாமானியன் படம் சரியாக செல்லவில்லை. ரிலீஸ் செய்வதற்குள் ஏகப்பட்ட பிரச்னை வந்தது. ஆனால் ஆலங்குளத்தில் உள்ள டிபிவி மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு வெளியான 20வது நாளில் வந்தேன்.

அப்போது விபின் சக்கரவர்த்தியிடம் தியேட்டர் கட்டணத்தை குறைத்தால் நிறைய மக்கள் வருவார்கள் என சொன்னேன். உடனே டிக்கெட் கட்டணத்தை ரூ.50 ஆக மாற்றினார்கள். படம் அருமையான கதை கொண்டது என்பதால் இந்த தொகுதி மக்களுக்கு சென்றடைய வேண்டும் என காரணம் கூறினார்.

படம் 50 நாள் ஓடினால் நான் ஆலங்குளம் பகுதி மக்களை சந்தித்து நன்றி சொல்கிறேன் என உறுதியளித்தேன். 116 நாட்கள் அந்த படம் ஓடியது. அதேசமயம் 1985ம் ஆண்டில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். நான் பிரச்சாரம் செய்யாத ஊரில்லை. அந்த வகையில் 1991ல் ஏற்பட்ட பழக்கத்தால் நான் ஒரு உறுதியளித்தேன்.

அதன்படி விபின் சக்கரவர்த்திக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். சாமானியன் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் யாரும் என்னை எப்படி இருக்கிறீர்கள் என கேட்கவில்லை. இந்த காலத்தை என்னைப் பார்த்துக் கொண்டது விபின் சக்கரவர்த்தி குடும்பம் தான். அவர் எந்த கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்” என ராமராஜன் தெரிவித்துள்ளார்.