2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் அதே வேளையில் கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு தவெக தலைவர் விஜயை தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடக்கும் என்ற நிலையில் வழக்கத்தை விட இம்முறை அரசியல் களம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, எப்போதாவது 4ம் அணி என கள நிலவரம் இருக்கும். ஆனால் இம்முறை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் காண்பது பல அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளது.

தவெகவுக்கு முதல் தேர்தல் என்றாலும் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். இவர்களில் வாக்குரிமை இருப்பவர்கள் விஜய்க்கு ஓட்டு போட தயாராகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதனால் தவெக அமோக வெற்றி பெறுமா அல்லது மற்ற கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து நெருக்கடி கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கட்டம் கட்டும் காங்கிரஸ்

இப்படியான நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சியான காங்கிரஸ் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் இம்முறை அக்கட்சியைச் சேர்ந்த சிலர் அதிகாரத்தில் பங்கு கேட்டு திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரத்தில் பங்கு என்பதை நிராகரித்து விட்ட நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

அதேசமயம் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திமுக மட்டுமல்லாமல் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்க, கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை மறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திமுகவுடன் மட்டும் தான் கூட்டணி பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தினார்.

தமிழ்நாட்டில் விரைவில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இதனால் இப்பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டதாக சொல்லப்பட்டது.

கேரளாவில் இருந்து வந்த அழைப்பு

இந்த நிலையில் கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்ய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை அழைக்க அம்மாநில காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும், தவெக தரப்பு எவ்வித முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

கேரளாவில் இடது சாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது பாஜகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல்வேறு மாநில தேர்தல்களில் தோல்வியுற்று தேய்ந்து வருகிறது. இதனை சரிகட்ட வலுவான ஆதரவு தேவை என்பதை அக்கட்சி தலைவர்கள் உணர்ந்துள்ளனர். கேரளாவைப் பொறுத்தவரை விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். இதனால் அவர் பரப்புரை மேற்கொண்டால் நிச்சயம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பலரும் கருதி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.