தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில் பெரிய மாற்றத்தை கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு:

இந்த விவகாரத்தில் விஜய் உடனடியாக கரூரை விட்டு கிளம்பியது, பாதிக்கப்பட்ட மக்களைத் தற்போது வரை நேரில் சந்திக்காதது, தவெக நிர்வாகிகள் யாரும் முறையாக பதில் அளிக்காதது என்று பெரும் பின்னடைவு தவெக-விற்கு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவெக-விற்கு புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆதவ் அர்ஜுனா இந்த சம்பவம் தொடர்பாக முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் திமுக அரசு மீதும், காவல்துறை மீதும் விமர்சனத்தை முன்வைத்தார்.

இனி கற்றுக்கொள்வாரா விஜய்?

இந்த தீர்ப்புக்கு பிறகு தவெக தனது அரசியல் வேகத்தை கூட்ட தயாராகி வருகிறது. 41 பேரின் குடும்பத்தையும் தவெக தலைவர் விஜய் தத்தெடுப்பதாக ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது தவெக-வினருக்கு ஆறுதலை தந்துள்ளது. அதேசமயம், இந்த சம்பவத்தில் இருந்து விஜய் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதாவது, தவெக-விற்கு விஜய் மட்டுமே பலமாக உள்ளார். இதனால், தேர்தலில் அவர் நிற்கும் தொகுதியில் மட்டுமே தவெக-விற்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. ஆனால், மற்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் இருந்தாலும் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

வலுவில்லாத இரண்டாம் கட்டத் தலைவர்கள்:

இதனால், தவெக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார். நெருக்கடியான தருணத்தில் விஜய்க்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கவும், தகுந்த அறிவுரைகளை கூறவும் தக்க நபர்கள் கட்சியில் இல்லை என்பதையே கரூர் சம்பவம் காட்டியது. இதனால், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற துயர சம்பவங்களைத் தவிர்க்கவும், நெருக்கடியான நேரத்தை எதிர்கொள்ளவும் உகந்த ஆட்களை விஜய் உடன் வைத்துக் கொள்ள வேண்டியதையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

இரண்டாம் கட்டத் தலைவர்களை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ள விஜய், அதை செயல்படுத்த வேண்டிய பணிகளையும் தொடங்க வேண்டிய சூழலில் உள்ளார். மற்ற கட்சியினரை காட்டிலும் விஜய் கட்சியினர் எந்தவாெரு சம்பவத்தை செய்தாலும் அது மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும் என்பதால் அவர்கள் பொதுவெளியில் கருத்துக்களைப் பகிர்வது, எதிர் தரப்பினர் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்வது போன்றவற்றிற்கு கட்சி சார்பில் பயிற்சி அளிக்க வேண்டியதும் அவசியமாக மாறியுள்ளது.

நெருக்கடியில் செயல்படுவது எப்படி?

விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அது அரசியலில் அவருக்கு பிரபலமாக உதவியதே தவிர, வாக்காக மாறுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகும். இதனால், வலுவான இரண்டாம் கட்டத் தலைவர்களை விஜய் உருவாக்காவிட்டால் விஜய்யால் தொடர்ந்து தேர்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இயலாது.

அதேசமயம் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா போன்றோரும் ஆக்கப்பூர்வமான முடிவுகளை விஜய்க்கு வழங்க வேண்டிய இடத்தில் உள்ளனர். கரூர் சம்பவத்தில் அவர்கள் அதுபோன்று செயல்படவில்லை என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் 8 மாத கால அளவே உள்ள நிலையில் விஜய் தன்னுடைய அரசியல் செல்வாக்கை அதிகரிக்க எந்தளவு முயற்சிக்கிறாரோ? அதே அளவு கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களையும் வலுவான முகமாக மாற்ற வேண்டியதும் அவசியமாக மாறியுள்ளது.