எனக்கு எதிராக ஏராளமாக சதி நடக்கிறது. கரூர் சம்பவத்தில் முதலில் சதி நடந்தது. தொடர்ந்து பல்வேறு விஷயங்களில், ஜனநாயகன் திரைப்படம் வரை சதி நடந்துகொண்டேதான் இருக்கிறது என்று விஜய் தெரிவித்துள்ளார். பட விவகாரம் குறித்தும் அவர் முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி பகுதியில், கட்சி நிர்வாகிகள் மத்தியில் இன்று தவெக தலைவர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக, திமுக சதி

’’தவெகவுக்கு எதிராக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து சதி செய்கின்றன. விஜய் வந்தால் பிழைப்பு போய்விடும் என்று நினைக்கிறார்கள். எஸ்ஓபி எனப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் விவகாரத்தில் திமுக சதி செய்கிறது.

எனக்கு எதிராகவும் ஏராளமாக சதி நடக்கிறது. கரூர் சம்பவத்தில் முதலில் சதி நடந்தது. தொடர்ந்து பல்வேறு விஷயங்களில், ஜனநாயகன் திரைப்படம் வரை சதி நடந்துகொண்டேதான் இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலினும் பட்டும் படாமல் ஆதரவு தெரிவித்தார். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் சந்தி சிரிக்கிறது. என்னை முடக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய், விஜியை முடக்க முடியாது’’ என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

தள்ளிப் போன ஜனநாயகன்

ஜனநாயகன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. எனினும் சென்ஸார் பிரச்சினையால் படம் தள்ளிப் போனது. குறிப்பாக தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தாமதம், நீதிமன்ற வழக்குகள் மற்றும் மறு ஆய்வுக் குழுவுக்கு படம் அனுப்பப்பட்டது போன்றவை வெளியீட்டில் சிக்கலை ஏற்படுத்தின.

தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை படம் வெளியாகவில்லை. படவெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டு, உரிய காலத்தில் படம் வெளியாகாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர்.

எனினும் இதுகுறித்து படத்தின் நாயகனும் தவெக தலைவருமான விஜய் இன்று வரை கருத்துத் தெரிவிக்காமல் இருந்த நிலையில், இன்று முதல்முறையாக விஜய் பேசியது குறிப்பிடத்தக்கது.