தமிழ்நாடு முழுவதும் கரூர் துயர சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. கரூரில் விஜய் தனது தவெக-விற்காக நடத்திய தேர்தல் பரப்புரையில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆறுதல் கூறியவர்களுக்கு நன்றி:

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பல்வேறு கோபத்தையும், கேள்விகளையும், விமர்சனத்தையும் எழுப்பியது. குறிப்பாக, விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காததும், தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா யாரும் மக்களைச் சந்திக்காதது இன்னும் தவெக மீது விமர்சனத்தையும் கோபத்தையும் உண்டாக்கியது.

திமுக ஆதரவாளர்கள் தவெக-வினரை விமர்சித்த நிலையில், அதிமுக - பாஜகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சீமான், அன்புமணி போன்ற அரசியல் தலைவர்களும் விஜய்யின் மனநிலையை புரிந்து கொள்வதாக தெரிவித்தனர். இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்டுள்ள விஜய் இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களின் மனநிலையை புரிந்து கொண்டு ஆறுதல் கூறிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

கூட்டணிக்கு தொடர் அழைப்பு:

விஜய்யின் நன்றி கூட்டணிக்கான அழைப்பிற்கான சம்மதமாகவே அரசியல் நிபுணர்களால் கணிக்கப்படுகிறது. இந்த மோசமான துயர சம்பவத்தில் விஜய்க்கு அதிமுக - பாஜக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் பலமிகுந்த திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக-விற்கு பலமிகுந்த கூட்டணி அவசியமாக மாறியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பேற்ற பிறகு அதிமுக இதுவரை எந்தவொரு பெரிய தேர்தலிலும் வெற்றியைப் பெற்றது இல்லை. இதனால், வரும் சட்டமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அதிமுக பக்கம் பாஜக மட்டுமே பெரிய கட்சியாக இருக்கும் நிலையில், ஒருங்கிணைந்த பாமக-வை உள்ளே கொண்டு வர பணிகள் நடந்து வருகிறது.

விஜய்யின் முடிவு என்ன?

ஆனாலும், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்களை பெரும்பாலும் தன்னகத்தே வைத்துள்ள விஜய் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. பாஜக-வை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள விஜய் அதிமுக-விற்கு பச்சைக்கொடி காட்ட தயங்கி வருகிறார்.

ஆனால், தற்போது விஜய்க்கு நிகழ்ந்துள்ள நெருக்கடியில் தவெக-வை தங்கள் கூட்டணியில் இழுக்க அதிமுக - பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர். அதன் எதிரொலியாகவே விஜய் தனக்கு ஆறுதல் தெரிவித்த அரசியல் கட்சிகளுக்கு நன்றி கூறியிருப்பதன் வெளிப்பாடாக கருதப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணிக்குள் விஜய் செல்வாரா? அல்லது பாஜக தனது கொள்கை எதிரி என்ற கோட்பாட்டிலே விஜய் செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.