Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி ஒட்டுமொத்த திமுக, அதிமுக ஆகியோருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக அசத்தியுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்குமா தவெக?

விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிட்டதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க 11 தொகுதிகள் தேவைப்படுகிறது. தவெக-வினர் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை:

இந்த சூழலில் புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக-வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். இந்த தகவலை அதிமுக எம்எல்ஏவும், ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் என்ன முடிவு செய்வார்?

அதிமுக பல இடங்களில் 3வது இடத்திற்கும், பல தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்துள்ள நிலையில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக-விற்கு தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, சந்தித்த அனைத்து பொதுத்தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக வரும் அந்தஸ்தைக் கூட அதிமுக இழந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது தலைமை மீதான விமர்சனத்தை தவிர்ப்பதற்கும், கட்சியில் தனது தலைமையை காப்பாற்றிக் கொள்ளவும் தவெக-வுடன் கூட்டணி அமைப்பது சிறந்த வழியாக கருதப்படுகிறது.

அவ்வாறு கூட்டணி அமைத்தால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம். எஸ்பி வேலுமணி போன்ற முக்கியமான கட்சியின் நிர்வாகிகளுக்கு அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமி வாங்கிக் கொடுப்பார் என்று கருதப்படுகிறது. அதிமுக தவெக-விற்கு ஆதரவு அளித்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எந்தவொரு கட்சியின் ஆதரவும் தவெக-விற்குத் தேவைப்படாது.

பாஜக கூட்டணி முறிவா?

அதேசமயம், அதிமுக தங்களுடன் கூட்டணி வர வேண்டும் என்றால் பாஜக-வுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என்று தவெக நிபந்தனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. பாஜக-விற்கு ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ள நிலையில், அவர்களுடனான கூட்டணியை முறிக்கவும் அதிமுக தயாராக உள்ளது.

இன்னும் 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள விஜய் தங்களுக்கு எந்தவொரு நெருக்கடியும் அளிக்காத கட்சியுடனே கூட்டணி அமைக்கும் என்று கருதப்படுகிறது.

TVK Vijay: ஜெயலலிதா பாணியில் விஜய்! தவெக ஆட்சியில் சபாநாயகர் யார் தெரியுமா?