Trump Tariff: புதிய மசோதா மூலம் அடுத்த வாரமே கூட இந்தியா மற்றும் சீனா மீது 500 சதவிகிதம் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா, சீனா மீது 500% வரி?

ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளையும் மீறி, அந்நாட்டிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நாடுகள் மீது 500 சதவிகிதம் வரை வரி விதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்த நடவடிக்கை புது தில்லி-வாஷிங்டன் வர்த்தக உறவுகளை கணிசமாக பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது. முன்மொழியப்பட்ட சட்டமானது ரஷ்யாவின் பெட்ரோலியம் மற்றும் யுரேனியம் பொருட்களை வாங்குவதில் தெரிந்தே ஈடுபடும் நாடுகள் மீது பெரிய அளவிலான வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது. உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்தே ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் அதிகளவில் எண்ணெய் வாங்கும் நாடாக உள்ளது. இதனால், அமெரிக்காவின் புதிய சட்டம் அமலுக்கு வந்தால், அதனால் பாதிக்கப்படக்கூடிய முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய சட்டம் சொல்வது என்ன?

புதிய மசோதாவை செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தலுடன் இணைந்து அறிமுகப்படுத்திய அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், "மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளை குறிவைத்து, உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கான நிதியை முடக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். இந்தச் சட்டத்தின் கீழ் அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடிய நாடுகள் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் என வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.

மேலும், ரஷ்யா அல்லது அதன் சார்பாக செயல்படும் நிறுவனங்கள் உக்ரைனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த சிக்கல் ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் தீர்மானித்தால், குறைந்தபட்சம் 500 சதவிகிதம் வரி விதிக்கப்படும். எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் மீறப்பட்டால், ரஷ்யா புதிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால் அல்லது உக்ரைன் அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், தடைகள் மீண்டும் விதிக்கப்படலாம்.

அதாவது, "ரஷ்யாவைச் சேர்ந்த யுரேனியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை தெரிந்தே இறக்குமதி செய்யும் நாடுகளிலிருந்து, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதத்தை அவற்றின் மதிப்பில் குறைந்தது 500% ஆக அதிகரிக்க வேண்டும்" என்று சட்டம் கட்டளையிடுகிறது.

சட்டம் நிறைவேறுமா?

ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய மசோதா மீது அடுத்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதில் நிறைவேற்றப்பட்டால் உடனாடியாக அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமானது, ரஷ்யாவின் பெரும்பாலான ராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் மூலமாக உள்ள எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதாகும். இதனால், இந்தியா மீது 500 சதவிகிதம் வரி விதிக்கப்படுமா? தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த மசோதா ஏற்படுத்த போகும் விளைவு என்ன? என பல கேள்விகள் எழுந்துள்ளன.