அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அன்று, காசா அமைதி வாரியத்தை அமைப்பதாக அறிவித்தார். இது பாலஸ்தீன பிரதேசத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க ஆதரவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ஒரு முக்கிய படியாகும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த வாரியம் என்ன செய்யும்.? பார்க்கலாம்.

வாரியம் குறித்து ட்ரம்ப்பின் பதிவு என்ன.?

இந்த வாரியம் குறித்து தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்த வாரியத்தை "இதுவரை கூடியதிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க வாரியம்" என்று விவரித்துள்ளார். மேலும் விவரங்களை தெரிவிக்காமல், வாரிய உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

அவரது பதிவில், "சமாதானக் குழு உருவாக்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பதில் எனக்கு மிகுந்த மரியாதை. குழுவின் உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். ஆனால், இதுவரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கூடிய மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க குழு இது என்று நான் உறுதியாகச் சொல்ல முடியும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!" என கூறியுள்ளார்.

மேலும், இதற்குப் பிறகான மற்றொரு பதிவில், “காசாவின் 20 அம்ச அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நாங்கள் நுழைந்துவிட்டோம். அமைதி வாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. காசா நிர்வாகத்திற்கான தேசிய குழுவிற்கு நான் ஆதரவளிக்கிறேன்“ என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, “எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் ஆகியவற்றின் ஆதரவுடன், ஹமாஸுடன் ஒரு விரிவான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை நாங்கள் உறுதி செய்வோம். அதில் அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைப்பதும், ஒவ்வாரு சுரங்கப் பாதையையும் அகற்றுவதும் ஆகும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஹமாஸ் உடனடியாக தனது வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும். இஸ்ரேலிடம் உயிரிழந்தவர்களின் உடலை திருப்பி ஒப்படைப்பது உள்பட, தாமதமின்றி முழுமையான ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்“ என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

“நான் முன்பே கூறியது போல், அவர்கள் இதை எளிதான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ செய்யலாம். காசா மக்கள் போதுமான அளவு துன்பப்பட்டுவிட்டார்கள். இதுவே சரியான நேரம்“ என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த குழு என்ன செய்யும்.?

15 பேர் கொண்ட பாலஸ்தீன தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்ட உடனேயே ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் முடிந்ததும் காசாவின் அன்றாட நிர்வாகத்தை கையாளும் பணியை இந்தக் குழு மேற்கொள்கிறது. திட்டத்தின்படி, ட்ரம்ப் தலைமை தாங்கவுள்ள அமைதி வாரியத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த குழு செயல்படும்.

காசாவில் பாதுகாப்பைப் பேணுவதற்காக சர்வதேச நிலைப்படுத்தல் படையை நிறுத்துவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாலஸ்தீன காவல் பிரிவுகளுக்கு பயிற்சி அளிப்பதும் இந்த பரந்த திட்டத்தில் அடங்கும்.

போர் ஓயுமா.?

அமெரிக்க ஆதரவுடன் கூடிய காசா அமைதித் திட்டம், அக்டோபர் 10-ம் தேதி முதன்முதலில் நடைமுறைக்கு வந்தது. இது ஹமாஸால் பிடிக்கப்பட்ட அனைத்து பணயக் கைதிகளையும் திரும்ப அழைத்து வந்தது மற்றும் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் தீவிரமான சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இருப்பினும், போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேலியப் படைகள் 451 பேரை கொன்றுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது போர் நிறுத்தத்தின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. தற்போது ட்ரம்ப் அமைத்துள்ள இந்த வாரியத்தின் மூலமாவது, போர் முழுமையாக ஓயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.