Top Brands Budget Cars: இந்திய சந்தையில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களின், பட்ஜெட் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

முன்னணி ப்ராண்ட்களின் பட்ஜெட் கார்கள்:

கார் வாங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட நபர்களின் முதல் தேர்வாக பட்ஜெட் மாடல்கள் இருக்கின்றன. அதனை உணர்த்தும் விதமாகவே எஸ்யுவிக்களின் ஆதிக்கத்தையும் தாண்டி, கடந்த ஆண்டில் மாருதியில் டிசையர் அதிகளவில் விற்பனையான கார் மாடலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள முதல் 6 கார் உற்பத்தி நிறுவனங்களின், மிகவும் குறைந்த விலை கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

டாப் 6 ப்ராண்ட்கள்:

கடந்த ஆண்டு விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய 6 நிறுவனங்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாருதி சுசூகி நிறுவனம், மஹிந்த்ரா & மஹிந்த்ரா, டாடா மோட்டார்ஸ், ஹுண்டாய், டொயோட்டா கிர்லோஸ்கர் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் அதிகம் விற்பனை செய்த நிறுவனங்களாக திகழ்கின்றன. அந்த வகையில் இந்த கார் நிறுவனங்கள் சார்பில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை (எக்ஸ் - ஷோரூம்) மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

6. கியா - சோனெட்

கியா நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலாக சோனெட் திகழ்கிறது. இந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவின் விலையானது, ரூ.7.30 லட்சத்தில் தொடங்கி ரூ.14.09 லட்சம் வரை நீள்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த காரின் லோயர் வேரியண்ட்களில் கூட புலியின் மூக்கை போன்ற க்ரில், பகல்நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், ஸ்டேண்டர்டாக 6 ஏர்பேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 7 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரானது, எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் 18.4 தொடங்கி 24.1 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

5. டொயோட்டா - க்ளான்சா

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலாக க்ளான்சா திகழ்கிறது. இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலை ரூ.6.39 லட்சத்தில் தொடங்கி ரூ.9.15 லட்சம் வரை நீள்கிறது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷனில் கிடைக்கிறது. சிஎன்ஜி எடிஷனில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மட்டுமே உள்ளது. டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் மற்றும் ABS ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. அதிகபட்சமாக சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. ஹுண்டாய் - க்ராண்ட் i10 நியோஸ்7

இந்தியாவில் ஹுண்டாய் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை கார் மாடலாக க்ராண்ட் i10 நியோஸ் விளங்குகிறது. இந்த காம்பேக்ட் ஹேட்ச்பேக்கின் விலையானது ரூ.5.47 லட்சத்தில் தொடங்கி ரூ.5.55 லட்சம் வரை நீள்கிறது. 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் ஆனது ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி எடிஷனுடன், ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் பை-ஃபியூல் இன்ஜின் மாடலானது மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டும் கிடைக்கிறது. எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் அதிகபட்சமாக லிட்டருக்கு 27 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குமாம்.

3. டாடா - டியாகோ

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் மலிவு விலை கார் மாடலாக, டியாகோ திகழ்கிறது. இந்த என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்கானது ரூ.4.57 லட்சத்தில் தொடங்கி ரூ.7.82 லட்சம் வரை நீள்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் எடிஷனில், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இரட்டை முன்புற ஏர்பேக்குகள், ஆண்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிலிட்டி சிஸ்டம், ரியர் பார்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என, இந்த விலைப்பிரிவிக்கு மிகவும் அதிகமான பல அம்சங்களை கொண்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில், 19 கிலோ மீட்டர் தொடங்கி 28 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கப்படுகிறது.

2. மஹிந்த்ரா - மஹிந்த்ரா XUV 3XO

உள்நாட்டு சந்தையில் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மஹிந்த்ராவின் மலிவு விலை கார் மாடலாக XUV 3XO திகழ்கிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவியின் விலையானது ரூ.7.28 லட்சத்தில் தொடங்கி ரூ.14.40 லட்சம் வரை நீள்கிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களானது, மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது. 10.25-இன்ச் டச்ஸ்க்ரீன், டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 7-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் லெவல்-2 ADAS போன்ற மேம்பட்ட பாதுகாப்பு, 360-டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள், முற்றிலும் LED விளக்குகள் மற்றும் 17-இன்ச் அலாய்களும் கவனத்தை ஈர்க்கின்றன. எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில், 18 கிலோ மீட்டர் தொடங்கி 21.2 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறதாம்.

1. மாருதி சுசூகி - எஸ் ப்ரெஸ்ஸோ

நாட்டின் முதன்மையான கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி தரப்பில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை கார் மாடலாக எஸ்-ப்ரெஸ்ஸோ திகழ்கிறது. மினி எஸ்யுவி போன்ற டிசைனை கொண்டுள்ள இந்த பட்ஜெட் ஃப்ரெண்ட்லி ஹேட்ச்பேக்கின் விலையானது, ரூ.3.5 லட்சத்தில் தொடங்கி ரூ.5.25 லட்சம் வரை நீள்கிறது. இந்த காரில் 1.0 லிட்டர் K10C டூயல் செட் 3 சிலிண்டர் இன்ஜின் ஆனது, சிஎன்ஜி எடிஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது. டாப் வேரியண்ட்களில் 7.0-இன்ச் ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் எண்ட்ரி, பவர் விண்டோஸ் (முன்பக்கம் மட்டும்), மேனுவல் ஏர் கண்டிஷனிங், ஸ்டீயரிங்-மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல்கள், டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள் , EBD உடன் ABS , பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் வேக எச்சரிக்கை அமைப்பு என பல அம்சங்க்ள் வழங்கப்படுகின்றன. எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில், 24.12 கிலோ மீட்டர் தொடங்கி 32.73 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறதாம்.