தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 வாரங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகள் அனல் பறக்க வரிந்து கட்டி களத்தில் பணியாற்றுவது என்பது வழக்கமான ஒன்றாகும். தேர்தல் நெருங்கும் ஒரு வருடம் முதலே பரபரப்பாய் பணியாற்றும் அரசியல் கட்சிகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தீயாய் பணியாற்று வருவார்கள்.

டீ குடிப்பது முதல் துணி துவைப்பது வரை:

குறிப்பாக, மக்களிடம் வாக்கு சேகரிக்க தினசரி ஒவ்வொரு கட்சியின் பிரமுகர்களும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களும், வார்டு உறுப்பினர்களும், எம்பி-க்களும் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பார்கள். டீக்கடைகளில் சாமானிய மக்களுடன் இணைந்து டீ குடித்து தாங்களும் சாமானியர்கள் என்று மக்களிடம் பிரதிபலிப்பார்கள்.

பல இடங்களில் கடைகளில் தோசை சுட்டும், பரோட்டோ போட்டும், துணி துவைத்தும் வாக்கு சேகரித்து வருகின்றனர். குறிப்பாக, வீடு, வீடாகச் சென்று மக்கள் கால்களில் விழுந்து வாக்கு சேகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்று. திமுக தொடங்கி புதியதாக வந்த தவெக வரை என இது ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் செய்யும் தேர்தல் யுக்தியாகவே கருதப்படுகிறது.

தேர்தலுக்கு பிறகும் நீடிக்குமா?

அதேசமயம், தேர்தல் சமயத்தில் மட்டும் இதுபோன்று தினசரி தொகுதிகளுக்கும், ஒவ்வொரு வீதிகளுக்கும் வரும் எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், கவுன்சிலர்கள் மற்ற நாட்களில் ஏன் இதுபோன்று தினமும் வந்து மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்பது இல்லை? என்று மக்களின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

சட்டமன்றம், நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் தொகுதிகளுக்குச் செல்ல முடியாது என்பது ஏற்புடையது ஆகும். ஆனால், மற்ற நாட்களில் அடிக்கடி தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கலாமே? என்று ஆதங்கத்துடன் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்விக்கு சில அரசியல் தலைவர்கள் விதிவிலக்காக இருக்கின்றனர். அவர்களை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அணுகும் வகையிலே இருக்கின்றனர்.

காத்திருக்கும் மக்கள்:

ஆனால், பல அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தேர்தல் சமயத்தில் டீ கடைகளில் நின்று டீ குடித்து வாக்கு சேகரிப்பது போல, அவர்களது பதவி காலத்திலோ மற்ற தேர்தல் சமயத்திலோ சாதாரண டீ கடையில் டீ குடிப்பது என்பது பார்க்கவே முடியாத காரியம் ஆகும்.

அதேபோல, வாக்கு சேகரிப்பதற்காக பொதுமக்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் பலரும் வெற்றி பெற்ற பிறகு தங்கள் அலுவலகத்தில் குறைகளைத் தீர்ப்பதற்காக மனுக்களுடன் வரும் பொதுமக்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கும் அவலமும் அரங்கேறுகிறது. இன்னும் சில அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற பிறகு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கே வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

மக்கள் ஆதங்கம்:

இதுமட்டுமின்றி தங்களது தொகுதிகளில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஆதங்கத்தையும் மக்கள் வெளிப்படுத்துகின்றனர். தேர்தலுக்கு முன்பு சில மாதங்களில் மின்னல் வேகத்தில் நடக்கும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பணிகள், அதற்கு முந்தைய காலங்களில் இருப்பது இல்லை என்ற வேதனையும் மக்களிடம் உள்ளது.

இது மட்டுமின்றி தேர்தல் நேரங்களில் பணிவாக பேசி வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற பிறகு மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பு வகிக்கும் கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் கடும் சொற்களாலும், தகாத வார்த்தைகளாலும் மக்களை பேசும் சம்பவங்களும் நடக்கிறது. அதற்கு சான்றாக ஏராளமான வீடியோக்களும் இணையத்தில் உள்ளது.

தேர்தல் சமயத்தில் சாமானியர்களில் ஒருவராக மக்களிடம் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகும் அதேபோல மக்களிடம் தங்களை பிரதிபலிப்பார்களா? என்ற கேள்வி காலம் காலமாக உள்ள ஒரு கேள்வியாக உள்ளது. இந்த கேள்விக்கு சில அரசியல் தலைவர்கள் மட்டுமே விதிவிலக்காக இருந்துள்ளனர்.