2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் தலைநகர் சென்னையின் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

தவெக தமிழ்நாடு முழுவதும் முன்னிலை

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தல் வாக்கு முடிவுகள் இப்போது (மே 4ஆம் தேதி) எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆச்சரியப்படுத்தும் விதமாக தவெக தமிழ்நாடு முழுவதும் முன்னிலை வகித்து வருகிறது, இரண்டாம் இடத்தை அதிமுக பெற்றுள்ள நிலையில், மூன்றாம் இடத்துக்கு ஆளும் கட்சியான திமுக பெற்றுள்ளது.

காலை 9.30 மணி நிலவரப்படி, தவெக 83 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 65 தொகுதிகளிலும் திமுக 50 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

16 தொகுதிகளிலும் தவெகவே முன்னிலை

இந்த நிலையில் தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெகவே முன்னிலையில் உள்ளது. முதலமைச்சரும் கொளத்தூர் திமுக வேட்பாளருமான ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அங்கு தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலையில் உள்ளார். அதேபோல துணை முதலமைச்சரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினும் பின்னடைவில் உள்ளார். தவெக வேட்பாளர் செல்வம் முன்னிலையில் உள்ளார்.

அதேபோல் எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன், தி.நகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

திமுகவின் கோட்டையை தகர்த்த தவெக

தலைநகர் சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டையாக இருக்கும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 16 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடி, கோட்டையைக் கைப்பற்றியது. எனினும் 2026 தேர்தலில், திமுக 16 தொகுதிகளிலும் பின்னடைவில் உள்ளது. இது திமுக அமைச்சர்கள், களப் பணியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.