TN Election Result 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழக தேர்தல் - தவெக முன்னிலை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, சுடச்சுட முடிவுகள் வெளியாகி வருகின்றன. 200-க்கும் அதிகமான தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ள நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 90-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் சூழல் நிலவுகிறது. ஆளுங்கட்சியான திமுக 60-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்க, எதிர்க்கட்சியான அதிமுக சுமார் 69 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உருப்பெற, திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பாஜகவை திட்டம்போட்டு ஒழித்துகட்டிய எடப்பாடி:

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளுக்கு இணையாக தங்களுக்கம், தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மற்றொரு தேசிய கட்சியான பாஜகவானது அதிமுகவிடம் முரண்டு பிடித்தது. அதன்படி 27 தொகுதிகளை பெற்றது. அதுபோக தேசிய ஜனநாயக கூட்டணி என கூட்டணி ஆட்சி தான் அமையும் எனவும், அப்படி நடந்தால் அமைச்சரவையிலும் பங்கு கேட்போம் என பல பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால், அந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காரணம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தோல்வியை பாஜகவிற்கு பரிசளிக்க வேண்டும் என, தொகுதிப்பங்கீட்டின் போது எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டே செயல்பட்டதாக கூறப்படுகிறது.

சட்டமன்றத்தில் ”நோ என்ட்ரி”

கடும் அழுத்தங்களால் பாஜக கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கைக்கு எடப்பாடி சம்மதம் சொன்னாலும், அது எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிமுகவே இறுதி முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார். அதன்படி தான், அதிமுக மட்டுமின்றி தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கூட வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளையே, பாஜகவின் தலையில் எடப்பாடி கட்டியுள்ளார். இதன் விளைவாகவே கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கூட பின்னடைவை சந்தித்துள்ளனர். இதனால், இந்த சட்டமன்ற தேர்தல் முடிவில் பாஜக சார்பில் யாருமே சட்டமன்றத்திற்குள் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணி ஆட்சி என்பது மட்டுமின்றி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜகவிற்கு பிரதிநிதித்துவமே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தவெக - அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு?

பாஜக இருக்கும் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் அங்கம் வகிக்காது என்பதே விஜயின் சூளுரையாக உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாருமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அப்படி நடந்தால் ஏதேனும் ஒரு வலுவான சட்டமன்ற கட்சியின் ஆதரவு என்பது விஜய்க்கு மிகவும் அவசியமானதாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டால் தங்களது பரம எதிரியாக கருதி வரும் திமுக உடன் விஜய் கூட்டணி சேர வாய்ப்பில்லை. கொள்கை எதிரியாக கருதப்படும் பாஜகவின் பங்களிப்பு இல்லாத, அதிமுகவை ஏற்க அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம், பாஜக இல்லாத அதிமுக கூட்டணியுடன், கூட்டணி அமைத்து விஜய் ஆட்சி அமைத்து முதலமைச்சராகவே அதிக வாய்ப்புள்ளது.

எடப்பாடிக்கு கிடைத்த வெற்றி:

தவெக உடன் கூட்டணி அமைத்து பாஜக அல்லாத அதிமுக கூட்டணி, ஆட்சியில் அங்கம் வகித்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ள தொகுதிகளை ஒதுக்கியது, சட்டமன்றத்தில் மத்தியில் ஆளும்கட்சியின் பிரதிநிதித்துவத்தையே இல்லாமல் செய்தது, தனிப்பெரும்பான்மையையே பெறாவிட்டாலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது என அனைத்திலும் எடப்பாடிக்கு சாதகமான சூழல் அமைந்துள்ளது. பாஜகவும் இல்லாததால் திமுகவை வீழ்த்துவதே இலக்கு என, அதிமுக உடன் விஜயும் தாராளமாக கூட்டணி அமைக்கலாம்.