TN Election 2026 Chennai Covai: தவெக தரப்பு பிரிக்கும் வாக்குகளால் சென்னையில் கணிசமான தொகுதிகளில் அதிமுக இந்த முறை வெற்றி வாகை சூடும் என கூறப்படுகிறது.

கோட்டைகளை கோட்டை விடும் திமுக, அதிமுக..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம், அரசியல் தலைவர்களின் பரப்புரையால் சூடுபிடித்துள்ளது. அதேநேரம், ஒவ்வொரு தொகுதியில் நிலவும் களநிலவரமும் ஆச்சரியம் அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேநேரம், தங்களது மிகப்பெரிய பலமாக கருதப்படும் கோவை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி 10 இடங்களிலும் வென்று அசத்தியது. ஆனால், இந்த முறை சென்னையில் திமுகவும், கோவையிலும் அதிமுகவும் ஒட்டுமொத்த தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான தவெக பிரிக்கும் வாக்குகளால் இரண்டு மாவட்டங்களின் பல தொகுதிகளிலும் வெற்றி, தோல்வி மாற உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தளரும் திமுகவின் பிடி

ஆளுங்கட்சியாக இருக்கும் எந்தவொரு கட்சியும், தலைநகர் சென்னையை தங்கள் வசம் வைத்திருக்க உதவும். அந்த வகையில் கடந்தமுறை ஒட்டுமொத்த 16 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி இருந்தது. இது அந்த கட்சி தனிப்பெரும்பான்மை பெறவும் முக்கிய பங்கு வகித்தது. ஆனால், இந்த முறை குறைந்தபட்சம் 4 தொகுதிகள் வரை சென்னையில் அதிமுக வெல்லும் சூழல் நிலவுகிறதாம். அதில், தியாகராய நகர், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு நிலவுகிறதாம். அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி ஆகியோர் திமுக வேட்பாளருக்கு கடும் நெருக்கடி வாய்ப்பு உள்ளதாம். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெறும் 137 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக வேட்பாளர் சத்தியா வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறை அந்த தொகுதியிலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளதாம்.

கோவையில் உதிக்கும் சூரியன்..

மறுமுனையில் கொங்கு பெல்டின் தலைநகராக பார்க்கப்படும் கோவையில், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. கடந்த முறை கரூர் மாவட்டத்திற்கு மட்டுமே பொறுப்பு வகித்து 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தந்த செந்தில் பாலாஜியை, இந்த முறை ஒட்டுமொத்த கொங்கு பெல்டிற்குமான பொறுப்பாளராக திமுக நியமித்துள்ளது. இதனால் அவரே கோவை தெற்கு தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார். இதுபோக வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடும் கோவை வடக்கு, சிங்காநல்லூர், வால்பாறை போன்ற கோவை மாவட்டத்திற்குள் இருக்கும் 3 முதல் 4 தொகுதிகளை இந்த முறை திமுக கைப்பற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்கு பெல்டில் அந்த கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையக்கூடும்.

தவெகவால் திமுக ஷாக்..

சென்னையில் பல தொகுதிகளில் தவெக சார்பில் கட்சியின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என். ஆனந்த், முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் உள்ளிட்ட பலரும் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். இவர்களுக்கான வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருந்தாலும், ஒட்டுமொத்தமாகவே பெரிய அளவில் வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால், கடந்த முறை மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பல தொகுதிகளில் இந்த முறை அதிகவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாம். இதே சூழல் தான் கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.