தேர்வு முடிந்த நாளில் ஏரியில் குளிக்கச் சென்று உயிரிழந்த அரசு பள்ளி மாணவர் அபிஷேக் 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று தாம் படித்த பள்ளியில் முதலிடம் பெற்றது அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. கும்மிடிப்பூண்டியில் நடந்த இந்த சோக சம்பவம் நம் நெஞ்சையும் பதற வைத்துள்ளது.

ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரியத்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் பாபு-செல்லா தம்பதியினர். இவர்களுக்கு மோனிகா என்ற மகளும்(17), அபிஷேக் (15) என்ற மகனும் இருந்த நிலையில் இருவருமே கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே +2 மற்றும் 10-ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி 10-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவுற்ற நிலையில் நண்பர்களுடன் அருகில் உள்ள பன்பாக்கம் பெரிய ஏரியில் குளிக்க சென்ற அபிஷேக், ஏரியில் மூழ்கி சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை

இந்த நிலையில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், உயிரிழந்த மாணவர் அபிஷேக் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அறிவியலில் 100, தமிழ், ஆங்கிலம், கணிதம் தலா 99, சமூக அறிவியல் 98 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். ஏரியில் மூழ்கி உயிரிழந்த மாணவர் தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியது அபிஷேக்கின் குடும்பத்தார் மட்டுமின்றி, சக நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் கலங்கடிக்க செய்துள்ளது.

இதையும் படிங்க: TVK Ministers Age: 40+ வயதில் 22 அமைச்சர்கள்..! 60 வயதை கடந்த 4 பேர் - சிஎம் விஜய் அமைச்சரவையின் வயது விவரம்

பார்ப்பதற்கு உயிரோடு இல்லை

படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டிலும் படுசுட்டியான அபிஷேக், வீடு முழுவதும் கோப்பைகளையும், சான்றிதழ்களாலும் நிரப்பி உள்ளார்.10-ஆம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்த அபிஷேக், அதை பார்ப்பதற்கு உயிரோடு இல்லை என அவரது பெற்றோர் கதறுவது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

தம்பியின் கனவை நிறைவேற்றுவேன்

பெற்றோரின் அழுகை ஒருபுறம் என்றால், சமீபத்தில் வெளியான +2 தேர்வில் அதே பள்ளியில் படித்த அபிஷேக்கில் அக்கா மோனிகா, 600-க்கு 555 மதிப்பெண்கள் பெற்று அவரும் பள்ளியில் முதலிடம் பெற்றார். மருத்துவராவதே தமது குறிக்கோள் என நீட் தேர்வு எழுதிய மோனிகா, பொறியாளராக வேண்டும் என நினைத்த தமது தம்பி மரணித்து விட, அவரது ஆசையை நிறைவேற்ற இனி நீட் தேர்வை எழுத போவதில்லை எனவும், மாறாக தமது தம்பியின் கனவான பொறியியல் துறையில் படிக்க போவதாக கூறுகிறார்.