தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் டி.கே.பிரபுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காரைக்குடி தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. 108 தொகுதிகள் ஜெயித்த விஜய் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவோடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் விஜய் பொறுப்பேற்கும் அதே மேடையில் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் டி.கே.பிரபுவுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியானது காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்தி தவெக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதி மிகப்பெரிய முக்கியத்துவம் பெற காரணம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டது தான்.

டி.கே.பிரபு பின்னணி

காரைக்குடி அருகேயுள்ள தேவகோட்டை பகுதியின் இருமதி கிராமம் தான் டி.கே.பிரபுவுக்கு சொந்த ஊராகும். இவரது குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் பின்னணி கொண்டது. இவரது தந்தை பெயர் துரை கருணாநிதி, தாயார் பெயர் சரஸ்வதி ஆகும். இவர்கள் இருவருமே அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் காரைக்குடி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக களத்தில் மட்டுமல்லாமல் சமூக ஊடக வலைத்தளத்திலும் மிகப்பெரிய அதிர்வலைகளை டி.கே.பிரபு ஏற்படுத்தினார். காரைக்குடியில் மிக பிரமாண்டமாக பல் மருத்துவமனை ஒன்றை நடத்தி வரும் இவர் தவெகவில் சிவகங்கை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

காரைக்குடி மக்களால் டாக்டர் தம்பி என அடையாளப்படுத்தப்படும் டி.கே.பிரபு, 2021 தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., மாங்குடி, அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி, நாதக வேட்பாளர் சீமானை தோற்கடித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சைக்கிளில் வலம் வந்த விஜய்

காரைக்குடியில் பிரசாரம் செய்ய வந்த விஜய் தாமதமானதால் அங்கு பேசாமல் சென்றார். அதேசமயம் சைக்கிள் ஓட்டி மக்களிடையே வரவேற்பை பெற்றார். அதற்கெல்லாம் முழு காரணம் டி.கே.பிரபு தான். காரைக்குடி முழுவதும் தன்னுடைய பெயரை கொண்டு போய் சேர்த்த பிரபுவுக்கு மக்கள் வாய்ப்பைக் கொடுத்தார்கள். அதனால் விஜய் பிரபுவுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்துள்ளார்.

42 வயதாகும் டி.கே.பிரபு காரைக்குடியின் புதிய ஹீரோவாக மாறியுள்ளார். பலராலும் அரசியல் களத்தில் ரீல்ஸ் டாக்டர் என கிண்டர் செய்யப்பட்டவர் இன்றைக்கு அமைச்சராகி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.