திருநெல்வேலியில் திருட வந்த இடத்தில் பணம், நகை எதுவும் இல்லாததால் டென்ஷனான திருடன் விரக்தியடைந்து கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டு என்பது உள்ளூர் முதல் உலகம் வரையில் பல வகைகளில் நடைபெறுகிறது. குறிப்பாக ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளிலும் கைவரிசை காட்டுவது என்பது தினமும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வாகும். சில நேரங்களில் வீட்டில் ஆட்கள் இருந்தாலும் நேர்த்தியாக திருடிச் செல்பவர்களும் உண்டு. இதில் சில திருடர்கள் ரொம்ப நேர்மையாக நடப்பார்கள். அதாவது திருடி விட்டு மன்னிப்பு கடிதம் எழுதுவது, செய்திகளில் பணம், நகை இழந்தவர்களில் கண்ணீர் கதையைக் கேட்டு அவற்றை திரும்ப ஒப்படைப்பது என்பது ரொம்ப அரிதாகவே நடக்கும்.

இதனால் இப்போதெல்லாம் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புதிதாக வீடு கட்டபவர்கள் கட்டாயம் வீட்டில் சிசிடிவி கேமராக்களை மாட்டி வைக்கிறார்கள். இந்த குற்றத்துக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதே உண்மையான கூற்றாகும்.

நெல்லையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

இப்படியான நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் வினோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அங்குள்ள பழைய பேட்டை பகுதியில் ஜேம்ஸ் பால் என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மகளைப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் மதுரைக்கு சென்றிருக்கிறார். இதனை நோட்டமிட்ட திருடன் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம், நகைகளை அள்ளி விடலாம் என வந்துள்ளான். அதன்படி பீரோவை உடைத்து அங்கிருந்த துணிகளை எல்லாம் உதறி பார்த்தும் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லை. அங்கிருந்த ஒரு உண்டியலில் ரூ.1000 பணம் மட்டும் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படியாக ஆசையாக திருட வந்த இடத்தில் ஒன்றுமே இல்லையே என ஆத்திரமடைந்த அந்த திருடன் வீட்டின் உரிமையாளருக்கு 4 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான். அதில், “வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. அப்புறம் எதுக்கு இத்தனை கேமரா இருக்கு. அடுத்த தடவை என்ன மாதிரி யாரும் திருட வந்து ஏமாற வேண்டாம். தயவு செய்து பணம் வைக்கவும். போங்கடா வெண்ணைங்களா.. என்னை மன்னிச்சுருங்க” என கூறி விட்டு வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்கை எடுத்து சென்றுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக ஜேம்ஸ் பால் அளித்த புகாரின் அடிப்படையில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.