தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் வலுக்குறைந்து காணப்பட்டாலும், அந்த கட்சிகளுக்கு என ஒரு பாரம்பரியம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என களப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படியான நிலையில் திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தமுறை கூட்டணியில் தேமுதிக சேர்ந்திருப்பதால் கடந்த 2021 தேர்தலைக் காட்டிலும் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்திலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திருமாவளவன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

அந்த நேர்காணலில் திமுக வாங்கும் 100 வாக்குகளில் 25 வாக்குகள் விசிகவுடையது என சொல்லும் நீங்கள், திமுக கூட்டணியில் தேமுதிக அதிக இடங்கள் வாங்கினால் பரவாயில்லை என நினைப்பது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. காங்கிரஸூக்கு தமிழ்நாட்டில் என்ன பலம் இருக்கிறது என கேட்கிறார்கள். ஒரு தேசிய கட்சியாக பலமுறை இந்தியாவையும், சிலமுறை தமிழ்நாட்டையும் ஆட்சி செய்திருக்கிறது. அதற்கு என ஒரு பாரம்பரியம் இருப்பதால் மரியாதை கொடுக்க வேண்டியுள்ளது.

அதேபோல் தேமுதிக தமிழ்நாட்டில் ஒருமுறை எதிர்க்கட்சியாக இடம் பிடித்தது. விஜயகாந்த் 2011ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அந்த அரசியல் ரீதியான அந்தஸ்து என்ற ஒன்று உள்ளது. தேமுதிக மக்கள் நல கூட்டணியில் இணைந்தபோது விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தோம். 234 தொகுதிகளிலும் அவர்கள் பெரும்பான்மையான பங்களிப்பை எடுத்துக்கொண்டார்கள். கூடுதலான இடங்களை எடுத்துக் கொண்டார்கள். மீதமுள்ள இடங்களை நாங்கள் ஆளுக்கு 25 தொகுதிகள் என போட்டியிட்டோம். இன்றைக்கு அவர்கள் வலுக்குறைவாகவோ அல்லது வாக்கு வங்கி குறைவாகவோ இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு என ஒரு அங்கீகாரம் உள்ளது. அதை குறைத்து மதிப்பிட முடியாது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாக்கு வங்கி நிறைய இருக்கலாம். எங்களுக்கு 10, 12 சதவிகிதம் வாக்குகள் இருக்கிறது என சொல்லலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். எனினும் நாங்கள் இன்னும் நிரூபிக்கவில்லை. அதனால் எங்களை விட தேமுதிகவுக்கு அதிக தொகுதி கொடுத்தாலும் பிரச்னையில்லை.

ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தையின்போது குறைவான தொகுதி கொடுப்பது பற்றிய கருத்துகள் இருக்கும். கடந்த தேர்தலின்போது எத்தனை இடங்கள் பெற்று அதில் எத்தனை வெற்றி பெற்றார்கள் என்பதை வைத்து தான் பேச்சுவார்த்தை தொடங்கும். அதை வைத்து தொகுதியை முடிவு செய்வார்கள்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.