Thaipusam 2025: தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. இந்த நிலையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாகளில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பாகும். இந்த தைப்பூசதிருவிழாவை யொட்டி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் அனைவரும் இன்று அதிகாலை முதலே கோவிலில் குவிந்துந்துள்ளதுடன் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஏராளமான பக்தர்கள் வாயில் அழகு குத்தியபடி காவடி சுமந்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை மற்றும் திருச்செந்தூர் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.