ரயில்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகள்

இந்திய ரயில்வே நம் நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சாதனமாக திகழ்கிறது. மின்சார ரயில்கள் தொடங்கி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் வரை பல்வேறு கட்டண விகிதங்களில், பல்வேறு இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் சாதாரண, குளிர்சாதன வசதிகளுடனும் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரயில்வேயில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி உள்ளது. இதிலும் தட்கல், ப்ரீமியம் தக்கல் எனப்படும் புறப்படும் நாளுக்கு முன்தினம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி ஏசி டிக்கெட்டுகளாக இருந்தால் காலை 10 மணிக்கும், சாதாரண படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும் திறக்கப்பட்டு 2 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகி விடும்.

முறைகேடுகளை தடுக்க முடிவு

சில மாதங்களுக்கு முன் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தக்கல், 60 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இடைத்தரகர்கள் மோசடியை தடுக்க முதல் 15 நிமிடங்கள் அவர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தை உபயோகிக்க முடியாது என கூறப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படியான நிலையில் ஆதார் எண் இணைத்திருந்தால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கவுண்டரில் தக்கல் முன்பதிவு, டிக்கெட் முன்பதிவில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

இனிமேல் ஓடிபி அவசியம்

இந்த நிலையில் கவுண்டரில் தக்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம் என்ற அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கவுண்டர்களில் முகவர்கள், இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் இருப்பதை நோக்கமாக கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் கவுண்டருக்கு செல்லும்போது கட்டாயம் தங்களுடைய செல்போனை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கொந்தளிக்கும் பயணிகள்

ஏற்கனவே தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய அதிகாலை முதலே ரயில் நிலைய கவுண்டர்களில் பலரும் காத்திருக்கின்றனர். தக்கல் தொடங்கும் நேரம் பெரும்பாலானோருக்கு டிக்கெட் கிடைக்காமல் போய் விடுகிறது. இப்படியான நிலையில் இனி ஓடிபி பெறுவதற்கும் விதி வந்து விட்டால் நிலைமை இன்னும் சிரமமாகி விடும் என பயணிகள் குமுறுகின்றனர். சில நேரங்களில் ஓடிபி கிடைக்க தாமதமாகி விடும். இது சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமின்றி பின்னால் காத்திருப்பவர்களுக்கும் சிரமத்தை உண்டாக்கி விடும் என்பதால் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் ஐஆர்சிடிசி இணையத்தளத்தை அனைவரும் எளிதாக இயக்க தேவையான வசதிகளை செய்ய வேண்டும் எனவும்,பல நேரங்களில் சர்வர் வேலை செய்யாமல் போய் இணையதளம் முடங்கி விடுகிறது. அதை முதலில் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.