கங்குவா

பெரியளவில் பில்டப் கொடுக்கப்பட்டு வெளியாகி பின் ஏமாற்றத்தைக் கொடுத்த படங்களில் கங்குவா படமும் ஒன்று. பான் இந்திய லெவல் ப்ரோமோஷன் , பிரம்மாண்ட பட்ஜெட் , இந்திய சினிமாவின் பெருமை , மதம் கொண்ட யானை , என பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியானது கங்குவா. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யா படத்தை திரையரங்கில் பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. திரையரங்கில் 12 நாட்களை கடந்துள்ள கங்குவா இந்தியளவில் 100 கோடி வசூலையே இதுவரை நெருங்கியுள்ளது. ஆனால் படம் உலகளவில் 2000 கோடி வசூல் எடுக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்திருந்தார்.

மற்ற படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அந்த படங்கள் ட்ரோல் செய்யப்படுவதில்லை. ஆனால் கங்குவா திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பயங்கரமாக ட்ரோல் செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் படக்குழு கொடுத்த ஹைப் என்று சொல்லலாம். படத்தில் திரைக்கதை ரீதியாகவும் மற்ற தொழில்நுட்ப ரீதியாகவும் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு கங்குவா படத்தின் தோல்விக்கு காரணம் ஒன்றை கூறியுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்சயன்.

சூர்யாவின் வளர்ச்சியை தடுக்கிறார்களா அஜித் விஜய் ரசிகர்கள் ?

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்சயன் " நான் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் பேசிய நேர்காணலில் ஒன்று கூறியிருந்தேன். அதாவது சூர்யா மேலே வந்துவிட கூடாது என்று இரு ஸ்டார்களின் ரசிகர்கள் சூர்யாவை டார்கெட் செய்து அடிக்கிறார்கள். அதேபோல் தற்போது இரு அரசியல் கட்சிகளும் சூர்யாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. சூர்யாவின் முந்தைய படங்கள் பேசிய அரசியல் இதற்கு காரணமாக இருக்கலாம். இரு நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் இரு அரசியல் கட்சி என சேர்ந்து சூர்யாவின் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்களோ என்கிற ஒரு அனுமானம் இருக்கிறது.ஆனால் அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. நான் ஏதாவது ஒரு ட்வீட் போட்டால் அதை ட்ரோல் செய்பவர்கள் இந்த இரு நடிகர்களின் ரசிகர்களாக இருப்பார்கள். அதிலும் ஒரு நடிகரின் ரசிகர்களின் கூட்டம் ரொம்ப பெரிது. அதேபோல் சூர்யா கல்வி தொடர்பாக அவரது கருத்தை வெளிப்படுத்தி இருப்பார். அதனால் இந்த படத்தில் சில குறைகள் இருந்தால் இதான் வாய்ப்பு என்று அவரை அட்டாக் செய்கிறார்கள்"

தனஞ்சயனின் இந்த கருத்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. படம் நன்றாக இல்லை என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் அதற்கு இப்படி ஒரு உருட்டா என்பது அவர்களின் வாதம்.