நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கவிருந்து பின் பல்வேறு காரணங்களால் அவர் விலகி கவின் இப்படத்தில் கமிட் ஆகி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சம்மர் ரிலீசாக சென்ற மாதம் வெளியான திரைப்படம் ஸ்டார்.

கடந்த மே 10ஆம் தேதி வெளியான இப்படத்தினை பியார் பிரேம காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருந்தார். மலையள நடிகர் லால், நடிகைகள் அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், காதல் சுகுமாறன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் இசையில் பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரெய்லர் ஆகியவை ரிலீசுக்கு முன்னதாக கவனமீர்க்க, கடந்த மே 10ஆம் தேதி ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

லிஃப்ட், டாடா படங்களின் மூலம் கவனமீர்த்த கவினின் நடிப்பு ஸ்டார் பட ட்ரெய்லரிலும் ரசிகர்களைக் கவர இப்படம் பெரும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. நடிகனாக ஆசைப்படும் நாயகனின் வலி, ஆசை, கரடுமுரடனான பாதை, அப்பா - மகன் உறவு இவற்றை சுற்றிய கதையில், கவினின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றாலும் கதை ரசிகர்களை பெருமளவு ஈர்க்கத் தவறியது. எனினும் சுமார் 12 கோடி பட்ஜெட்டில் உருவான ஸ்டார் திரைப்படம், ரூ.20 கோடிகளுக்கு மேல் வசூலைக் குவித்தது.

தற்போது படம் வெளியாகி 27 நாள்கள் கடந்துள்ள நிலையில், சத்தமில்லாமல் இன்று ஸ்டார் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டார் திரைப்படம் எந்தவித முன்னறிவிப்புகளுமின்றி, இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் திடீரென வெளியாகியுள்ளது. இந்நிலையில் கவின் ரசிகர்களை இந்த ஓடிடி வெளியீடு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.