எஸ்பி பாலசுப்பிரமணியம்

எஸ்பிபி குரலுக்கு மயங்காதவர் இந்த உலகத்தில் எவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டவர். நெல்லூரில் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி பிறந்தவர் எஸ்பி பாலசுப்பிரமணியம். நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என்று பன்முக கலைஞராக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

பாடும் நிலா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், இதுவரை இசைத்துறையில் 6 தேசிய விருதுகளை வென்ற ஒரே பாடகர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர். ஆந்திரா அரசின் 6 நந்தி விருதுகளையும் வென்றுள்ளார். கிட்டத்தட்ட 54 ஆண்டுகள் சினிமாவில் பன்முக கலைஞராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட எஸ்.பி.பி, 12 மணி நேரத்தில் 21 பாடல்களை ரெக்கார்டு செய்து சாதனை படைத்தவர். இப்படி அவரது சாதனைகளையும், சினிமாவில் அவரது பங்களிப்பையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவு:

உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு செம்டம்பர் 25 ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில் ஏஐ மூலமாக அவரது வாய்ஸை பயன்படுத்த பலரும் கேட்டு வருகின்றனர். தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய காலத்தில் மறைந்த ஜாம்பவான்களின் குரல்களை AI தொழில்நுட்பம் வாயிலாக திரும்ப கேட்கும் படியாகவும், அவர்களை திரும்ப பார்க்கும்படியாகவும் உருவாக்கப்படுகிறது.

AI தொழில்நுட்பம்

அப்படியொரு நிகழ்வு மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடந்தது. AI தொழில்நுட்பம் மூலமாக கோட் படத்தில் விஜயகாந்தை மீண்டும் கொண்டு வந்திருந்தனர். இவ்வளவு ஏன் சமீபத்தில் திமுக நிகழ்வில் கூட கருணாநிதியை AI தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கி அவரது குரலை கேட்கும்படி செய்திருந்தனர்.
இந்த நிலையில் தான் அதே போன்று மறைந்த பாடும் நிலா எஸ்பிபிக்கும் செய்ய அவரது மகன் சரணிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

எஸ்பி சரண் வேதனை:

இது குறித்து அவர் கூறும் போது, அப்பா இருந்திருந்தால் ரஜினிகாந்தின் மனசிலாயோ பாட்டு பாட வாய்ப்பு கிடைத்திருந்தால் கூட நான் பாட மாட்டேன் வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஒரு பாடகருக்கு ஒரு பாட்டை பாட வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை உண்டு. ஆனால், AIல அந்த பாடகருக்கு அப்படியொரு வாய்ப்பை நீங்கள் தர மாட்டிக்கிறீங்க. AI மூலமாக யாருடைய குரலையும் திரும்ப கேட்கும்படி செய்யலாம். ஆனால், ஒருவருடைய எமோஷனை கொண்டு வர முடியாது. பலரும் எங்களிடம் வந்து அப்பாவோட வாய்ஸை AI மூலமாக கொண்டு வரலாமா என்று கேட்கிறார்கள். ஆனால், நான் வேண்டாம் என்று மறுத்து வருகிறேன். இதை ஒரு போதும் செய்யவும் மாட்டேன். அவர் ஒரு இடத்தில் இருக்கிறார். அப்படியே இருக்கட்டும். விட்டுருங்க என்று வேதனையோடு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.