ஐபிஎல் தொடரில் இன்று மும்பை - டெல்லி அணிகள் மோதியது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டெல்லி அணியின் அபாரமான பந்துவீச்சால் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தனி ஆளாக போராடிய ரிஸ்வி:

இதையடுத்து, 163 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தீபக் சாஹர், பும்ரா, சான்ட்னர், ஷர்துல் தாக்கூர் என வலுவான பந்துவீச்சு இருந்ததால் மும்பை டெல்லிக்கு சவால் அளிக்கும் என்று கருதப்பட்டது. கேஎல்ராகுல், நிதிஷ் ராணா அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுக்க சமீர் ரிஸ்வி அபாரமாக ஆடினார்.

7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற மோசமான நிலையில் வந்த சமீர் ரிஸ்வி தொடக்கத்தில் நிதானமாக ஆடி ஆட்டத்தை டெல்லியின் பக்கம் கொண்டு வந்தார். பும்ரா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், சான்ட்னர் என யார் வீசினாலும் அசராமல் பேட் செய்து ஆட்டத்தை முழுக்க முழுக்க டெல்லி பக்கம் கொண்டு சென்றார். அவர் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்ஸருடன் 90 ரன்கள் எடுக்க ஆட்டம் முழுவதும் டெல்லி பக்கம் சென்றது.

டெல்லி அணியின் கில்லி:

22 வயதே ஆன சமீர் ரிஸ்வி அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பேட்டிங் செய்து வருகிறார். கடந்த சீசனின் டெல்லி அணி ஆடிய கடைசி போட்டியில் தனி ஆளாக போராடி டெல்லியை வெற்றி பெற வைத்தார். அதன்பின்பு, இந்த சீசனில் ஆடிய முதல் 2 போட்டியிலும் அரைசதம் விளாசியுள்ளார்.

சென்னை அணிக்காக முதன்முதலில் ஏலத்தில் எடுக்கப்பட்ட சமீர் ரிஸ்வி சிறப்பாக ஆடாத காரணத்தால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர், டெல்லிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட சமீர் ரிஸ்வி அந்த அணியின் அசைக்க முடியாத நட்சத்திரமாகவும் ஆபத்பாந்தவனாகவும் உருவெடுத்து வருகிறார்.

அசத்தலான ஆட்டம்:

வரும் காலத்தில் இந்திய அணியிலும் அவர் இடம்பிடிப்பார் என்று கருதப்படுகிறது. மிக மோசமான சூழலில் இருந்து அணியை மீட்பது என்பதும், அதுவும் மும்பை போன்ற வலுவான அணியிடம் இருந்து ஆட்டத்தை கைப்பற்றுவதும் என்பதும் அசாத்தியமான ஒன்றாகும்.

இதுவரை 15 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள ரிஸ்வி 220 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக அவர் ஆடிய 3 ஐபிஎல் போட்டியிலும் அரைசதம் விளாசியுள்ளார். சென்னை அணியால் 8.4 கோடிக்கு கடந்த 2024ம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு 95 லட்சத்திற்கு டெல்லியால் ஏலத்தில் வாங்கப்பட்டவர்.

இந்த சீசனில் இனி வரும் போட்டிகளிலும் ரிஸ்வி ஆட்டம் அனலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.