2026 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இட ஒதுக்கீடு சேர்க்கை நடைமுறையை தொடங்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளிகளில் RTE எனப்படும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

2013-14 முதல் 2025 -2026 ஆம் கல்வியாண்டு வரை இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த மாணவர் சேர்க்கை நடைமுறை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 29 க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குழந்தையின் இருப்பிடம் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.

எமிஸ் லாகின்

RTE Act-ன்படி 25% இடஒதுக்கீட்டிற்கான சேர்க்கைக்கு தகுதியான இடங்களின் எண்ணிக்கை, 2025 -2026 ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் (L.K.G/ I) EMIS இணையதளத்தின்படி உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையில் 25% ஐ கணக்கிட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் EMIS login-ல் 6.4.2026 அன்று வெளியிடப்படும்.

சார்ந்த பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை 7.4.2026 அன்று 12(1)(சி) இன் கீழ் 25% சேர்க்கைக்கான தகுதியான இடங்களை (Alloted Seat) பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். 15.4.2026 அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் (tnemis.tnschools.gov.in) வெளியிடப்படும்.

ஏப்ரல் 20 முதல் மாணவர் சேர்க்கை

சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in. என்ற இணையதளத்தில் 20.04.2026 முதல் 18.05.2026 வரை எங்கிருந்து வேண்டுமானாலும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல 20.4.2026 முதல் 18.05.2026 வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் /மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்)/ மாவட்டக் கல்வி அலுவலர் /வட்டாரக் கல்வி அலுவலர் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: tnemis.tnschools.gov.in