Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம், வரும் நவம்பர் 4ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்ட் மின்சார பைக்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆஃப்-ரோட் மற்றும் லாங் ரைட் மோட்டார் சைக்கிள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தான். அந்த அளவிற்கு இந்திய சந்தையில் ஆழமாக கோலோச்சி, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்நிலையில் தான், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் எதிர்கால சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு, மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, நிறுவனம் இறுதியாக மின்சார பைக்கின் வெளியீட்டிற்கான தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் முதல் மின்சார பைக் வரும் நவம்பர் 4ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டீசரை வெளியிட்ட ராயல் என்ஃபீல்ட்:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் பகிர்ந்துள்ள டீசரில் பைக் காட்டப்படவில்லை. மாறாக, வானத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று, பாராசூட் உதவியுடன் மெதுவாக தரையிறக்கப்படுவதை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது முதலில் பார்ப்பவர்களுக்கு புதிராகத் தோன்றலாம், ஆனால் இது வரலாற்று சிறப்பம்சம் கொண்டது என்பது தான் உண்மை.

”ஃப்ளையிங் ஃப்ளீ”

ராயல் என்ஃபீல்ட் ஃப்ளையிங் ஃப்ளீ என்பது ஒரு இலகுரக மோட்டார் சைக்கிள் மாடல் ஆகும். இது போக்குவரத்து சாதனமாக உருவாக்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போர்க்களங்களில் பாராசூட் மூலம் விமானங்களில் இருந்து தரையிறக்கப்பட்டது. வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் துருப்புக்களுக்கு இடையே செய்திகளை விரைவாக எடுத்துச் செல்ல இது பயன்படுத்தப்பட்டது. போருக்குப் பிறகு, இது ஒரு மலிவான போக்குவரத்து வழிமுறையாக செயல்பட்டது. அதன் அடிப்படையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது முதல் மின்சார பைக் மாடலுக்கு ”ஃப்ளையிங் ஃப்ளீ” என்று பெயர் சூட்டும் என கூறப்படுகிறது.

கூடுதல் விவரங்கள்:

இந்தியாவில் ஃப்ளையிங் ஃப்ளீ பெயருக்கான வர்த்தக முத்திரை உரிமையை, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. இது வரவிருக்கும் மின்சார பைக்கிற்கு இந்தப் பெயரை சூட்ட, ஒரு வலுவான வாய்ப்பாக இருப்பதற்கு மற்றொரு காரணம் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு, ராயல் என்ஃபீல்டால் தாக்கல் செய்யப்பட்ட மின்சார பைக்கிற்கான வடிவமைப்பு காப்புரிமை தொடர்பான தகவல்களும் வெளியாக தொடங்கியுள்ளன.

எதிர்கால நோக்கம்:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் நீண்ட வரலாற்று பயணத்தை கொண்டதாகும். புதிய வாகனம் பாரம்பரிய மோட்டார் சைக்கிள் பவர்டிரெய்னில் இருந்து ஒரு இடைவெளியாக இருந்தாலும், நிறுவனம் புதிய பைக்கின் கலாச்சாரத்தை நிறுவி, வழக்கமான ராயல் என்ஃபீல்ட் பாணியில் அசல் கட்டமைப்புடன் இணைக்க விரும்புகிறது. ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் நவம்பர் 4 ஆம் தேதி பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.