Renault Duster Iconic: ரெனால்ட் டஸ்டர் மாடலின் ஐகானிக் எடிஷன், மற்ற வெர்ஷன்களை விட எந்த விதத்தில் சிறந்தது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ரெனால்ட் டஸ்டர் ஐகானிக் எடிஷன்

ரெனால்ட் டஸ்டர் அண்மையில் இந்திய சந்தையில் மீண்டும் கம்பேக் கொடுத்தது. இந்த முறை வலுவான இன்ஜின், கூடுதல் அம்சங்கள், புதிய டிசைன் என பல கவனிக்கத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது. மாடர்ன் அப்க்ரேட்கள் மூலம் கம்பீரமான சாலை இருப்பை உறுதி செய்வதற்காக, டஸ்டாரின் டாப் எண்ட் வேரியண்டான ஐகானிக் எடிஷன் மேனுவல் கியர்பாக்ஸ் 16 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் (எக்ஸ் - ஷோரூம்), ஆட்டோமேடிக் எடிஷன் 18 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வலுவான கட்டமைப்பு மற்றும் சிறந்த செயல்திறன் காரணமாக ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் நவீன சந்தைக்கு ஏற்ப கூடுதல் ஆற்றல் மற்றும் தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.

டர்போ பெட்ரோல் இன்ஜின்

புதிய டஸ்டரின் இதயமாக 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த இயந்திரமானது163PS மற்றும் 280Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. எளிமையாக சொல்லப்போனால் இந்த எஸ்யுவி ஆனது நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலைகள் என இரண்டிலும் வேகமாக செயல்படக்கூடியதாகும். 6 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது. இது வேகமாகவும் எந்தவித சிரமும் இன்றி கியரை மாற்ற வழிவகை செய்கிறது. அதிகபட்சமாக ஆட்டோமேடிக் எடிஷன் லிட்டருக்கு 18.45 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த செக்மெண்டில் டர்போ பெட்ரோல் எஸ்யுவி வழங்கும் நல்ல மைலேஜாக இது கருதப்படுகிறது.

இந்திய சாலைகளுக்கான கட்டமைப்பு

கரடுமுரடான சாலைகளை கூட நிலையாக கையாள்வது டஸ்டர் கார் மாடலின் மிகவும் முக்கியமான பலமாக பார்க்கப்படுகிறது. புதிய மாடலானது 212 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் உடன் அந்த பணியை சிறப்பாக செய்கிறது. அதாவது மோசமான சாலைகள், ஸ்பீட் ப்ரேக்கர்கள், மேலும் விளக்குகள் இல்லாத சாலைகளில் கூட தைரியமாக செல்ல வழிவகை செய்கிறது. இதுபோக டஸ்டர் கொண்டிருக்கும் 18 இன்ச் அலாய் வீல்களானது வாகனத்திற்கு ஸ்டைல் மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது.

அம்சங்கள் தாராளமாய் நிறைந்த உட்புறம்

கேபினின் உட்புறத்தில் புதிய டஸ்டர் மிகப்பெரிய அப்டேட்களை பெற்றுள்ளது. அதன்படி, வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முக்கியமான ட்ரைவிங் தகவல்களை பிரதிபலிக்கும் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. சொகுசான பயணத்திற்கான அம்சங்களாக வெண்டிலேயட் ஃப்ரண்ட் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. இந்த அம்சங்களானது தினசரி பயணத்தை மிகவும் வசதியானதாக, குறிப்பாக இந்திய வானிலைக்கு டஸ்டரை சரியான தேர்வாகவும் மாற்றுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்:

புதிய டஸ்டரில் பாதுகாப்பிற்கு ரெனால்ட் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதன்படி, 6 ஏர்பேக்குகள் நிலையானதாகவும், ஆண்டி - லாக்கிங் ப்ரேக்கிங் சிஸ்டம், EBD, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் ஆகியவை உள்ளன. ADAS தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய அப்க்ரேடாக பார்க்கப்படுகிறது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ப்ளைண்ட் ஸ்பாட் வார்னிங் மற்றும் எமர்ஜென்சி ப்ரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த சிஸ்டம்களானது ஓட்டுனருக்கான அழுத்தத்தை குறைத்து நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. நெருக்கமான இடங்களில் பார்கிங்கை எளிமையாக்குவதற்காக 360 டிகிரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு உகந்த டஸ்டர்

டஸ்டர் கார் மாடலானது நடைமுறைக்கு உகந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 518 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆனது குடும்பமாக பயணிக்க ஏற்ற இடவசதியை வழங்குகிறது. பின்புற சீட்டானது 60:40 என்ற அளவில் மடிக்க முடியும் என்பதால், தேவையான நேரத்தில் கூடுதல் இடவசதியையும் உருவாக்க முடியும். இதுபோக பவர்ட் டெயில்கேட் மற்றும் வசதியான இருக்கைகள் நீண்டதூர பயனத்திற்கு ஏற்றதாக உள்ளது.

2026 ரெனால்ட் டஸ்டர் ஐகானிக் லாஞ்ச் எடிஷன், நன்கு அறியப்பட்ட ஒரு பெயரை நவீன மேம்படுத்தல்களுடன் மீண்டும் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. சிறப்பான செயல்திறன், நல்ல க்ரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நீண்ட அம்சப் பட்டியலை வழங்குகிறது. ஆட்டோமேட்டிக் கியர் வசதி மற்றும் அன்றாடப் பயன்பாட்டுடன் கூடிய சக்திவாய்ந்த பெட்ரோல் எஸ்யுவி-யைத் தேடும் வாங்குபவர்களுக்கு, இந்தப் புதிய டஸ்டர் ஒரு வலுவான தேர்வாக அமைகிறது. நடப்பாண்டில் கம்பேக் தருவதை முன்னிட்டு, டஸ்டர் ஐகானிக் எடிஷனில் வெறும் 2 ஆயிரத்து 26 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்ய ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டது. வெளியாவதற்கு முன்பாகவே அவை முற்றிலும் விற்று தீர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. வரும் தீபாவளி காலத்தில் அந்த காரிகளின் விநியோகம் தொடங்க உள்ளது.