Ranveer Allahbadia Controversy: இந்தியா காட் டேலன்ட் எனும் நிகழ்ச்சியில் எழுப்பிய கேள்விக்காக, ரன்வீர் அல்லாபடியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யார் இந்த அல்லாபாடியா:

பீர் பைசப்ஸ் எனும் யுடியூப் சேனல் மூலம் பிரபலமான ரன்வீர் அல்லாபடியா, சமூகவலைதள இன்ஃப்ளூயன்சராகவும் உள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 45 லட்சம் ஃபாலோவர்ஸும், அவரது யூடியூப் சேனலுக்கு 1.05 சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர். அவரது பாட்காஸ்டில் மத்திய அமைச்சர்கள் உட்பட பல முக்கிய பிரபலங்களை அவர் நேர்காணல் செய்துள்ளார். குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய படைப்பாளிகள் விருது விழாவில், பிரதமர் மோடியிடமிருந்து 'ஆண்டின் சிறந்த டிஸ்ரப்டர்' என்ற விருதை ரன்வீர் அல்லாபாடியா பெற்றார்.

ஒரே கேள்வியால் எழுந்த சர்ச்சை:

இந்நிலையில் தான், நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் ' இந்தியாஸ் காட் லேடன்ட் ' நிகழ்ச்சியில் ரன்வீர் நடுவராக பங்கேற்றார். அப்போது, "உங்கள் பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா அல்லது அவர்களுடன் சேர்ந்து அதை ஒரே அடியாக முடித்து வைப்பீர்களா?" என்று ரன்வீர் அல்லாபாடியா ஒரு போட்டியாளரிடம் கேட்டார். ரன்வீருடன் சக நடுவர்களாக இருந்தவர்களும் அவரது கருத்துக்கு அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதில் இருந்து, ரன்வீருக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்திய கலாச்சாரத்தையே அவர் அவமதித்து விட்டதாகவும், பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றன.

அரசியல் புயல்:

ரன்விர் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாக காவல்நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டும் இந்தக் கருத்துக்களை விமர்சித்ததால், இந்த சர்ச்சை அரசியல் ரீதியாக ஒரு புயலாக உருவெடுத்துள்ளது. முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்து சுதந்திரத்திற்கும் வரம்புகள் இருப்பதாகக் கூறிய நிலையில், சிவசேனா (உத்தவ் தரப்பு) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பப் போவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி பொதுவெளியில் தான் ஆதரிக்கும் நபர்களை "இன்னும் உன்னிப்பாகக் கவனிக்க" வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் விமர்சித்துள்ளார்.

மன்னிப்பும்.. வழக்கும்..

தனது கருத்துகள் சர்ச்சையானதை தொடர்ந்து, ரன்வீர் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், “இந்தியாஸ் காட் லேட்டன்ட்டில் நான் சொன்னதை நான் சொல்லியிருக்கக் கூடாது. மன்னிக்கவும். எனது கருத்து பொருத்தமற்றது மட்டுமல்ல, அது எந்தவிதத்திலும் வேடிக்கையாகவும் கூட இல்லை" என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் பிரிவில் அசாமில் ரன்வீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, காவல்துறையினர் மும்பையில் வைத்து ரன்வீரிடம் விசாரணையும் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.